பெருந்தொற்றில் இருந்து தடுப்பூசி மனித உயிர்களை எவ்வாறு காப்பாற்றுகிறது???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் உலகம் முழுக்க ஒரு பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். இந்நூற்றாண்டில் பெரும் தொற்றாக உருவெடுத்திருக்கும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும் என்பதே பலரது எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. இத்தகைய எதிர்பார்ப்புள்ள இதே உலகத்தில்தான் தடுப்பூசிகளின் மீதான நம்பிக்கை இல்லாத தனமும் இருந்து வருகிறது. ஏனெனிந்த முரண்பாடு? அடிப்படையில் தடுப்பூசி என்ன வேலை செய்கின்றன? தடுப்பூசி மீதான நம்பிக்கை இழப்புக்கு காரணம் என்னவாக இருக்கிறது போன்ற விடயங்கள் இந்நேரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டவை ஆகும்.
நோய் ஏற்படுத்தும் கிருமிகளிடம் இருந்து மனிதன் மற்றும் விலங்குகளைக் காப்பாற்ற மருத்துவ உலகம் கண்டுபிடித்த புதிய வழிமுறைதான் தடுப்பூசிகள். இந்தத் தடுப்பூசிகள் பயன்பாட்டினால் உலகம் முழுவதும் ஆண்டொன்றிக்கு 20 முதல் 30 லட்சம் மக்களின் இறப்பு தவிர்க்கப்படுவதாக உலகச்சுகாதார நிறுவனம் கருத்து தெரிவித்து இருக்கிறது. இப்படி உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகையைக் காப்பாற்றும் தடுப்பூசிகளின் மீதான நம்பிக்கையற்றத் தன்மையும் உலகம் முழுக்கவே காணப்படுகிறது. 2019 இல் உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்ட 10 பேரிடர் அறிவிப்புகளில் தடுப்பூசிகள் மீது நம்பிக்கையில்லாத தனமும் ஒன்றாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த நூற்றாண்டில் மட்டும் தடுப்பு மருந்துகளின் கண்டுபிடிப்பால் பலக் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப் பட்டு இருக்கிறது. இதன் தொடக்கமும் சீனாவிடம் இருந்துதான் ஆரம்பித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதன் முதலான சீனர்கள் அம்மை நோய்க்கு எதிராக அம்மைக்குத்தும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். அடுத்ததாக பிரிட்டிஷ் மருத்துவர் எட்வர்ட் ஜென்னர் பெரியம்மைக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். பால் கறக்கும் பெண்களுக்கு பசுக்களின் காம்புகள் மூலமாக தட்டம்மை தோன்றுவதை முதன்முதலாக மருத்துவர் ஜென்னர் கண்டுபிடித்தார். பின்பு தட்டம்மை பாதிப்புகளை பார்த்த அவர் பசுக்களின் காம்புகளில் காணப்படுகின்ற வைரஸைக்கொண்டு நோய் எதிர்ப்பு மருந்தையும் கண்டுபிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நோயை ஏற்படுத்தும் வைரஸ் கிருமியையே நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்த டாக்டர் ஜென்னரின் கருத்துக்கள் 1798 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போதிதில் இருந்துதான் இந்த உலகம் (Vaccine) தடுப்பூசி என்ற சொல்லையே பயன்படுத்தி வருகிறது. தட்டம்மைக்கு மருந்து கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பு வரை உலகம் முழுவதும் ஆண்டொன்றுக்கு 26 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அந்த உயிரிழப்பு தவிர்க்கப்பட்டவுடன் உலக மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கை ஏற்பட்டது.
அதைப்போல 1960 களில் தட்டம்மையை ஒத்த வேறுபாதிப்புகள் உலகம் முழுக்க பீதியைக் கிளப்பியது. அப்போதும் இந்த தட்டம்மை தடுப்பூசியே உலக மக்களைக் காப்பாற்றியது. 2007 இல் தான் உலகம் முழுக்க தட்டம்மை பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. முடக்குவாதம் என்ற போலியோ அல்லது இளம்பிள்ளை வாதமும் உலகம் முழுக்க கோடிக்கணக்கான உயிர்களை பழிவாங்கியது. அதற்கான தடுப்பு மருந்துகள் விரைவுபடுத்தப்பட்டு தற்போது போலியோ மிகவும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் குறைந்து விட்டதாக நம்பிய தட்டம்மை தற்போது தலைத்தூக்கத் தொடங்கியுள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் வருத்தம் தெரிவித்து இருக்கிறது. அதாவது பெருந்தொற்றுக்கு எதிராக பெரும்பாலான மக்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு விட்டால் அந்த வைரஸை முழுவதுமாக கட்டுக்குள் வைக்கமுடியும். அமெரிக்காவில் சென்ற ஆண்டான 2019 இல் மட்டும் 980 பேருக்கு தட்டம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் 2004 ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்படவில்லை. எனவே தற்போது நோய்த்தொற்றுக்கான பாதிப்புகள் அதிகம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு மக்கள் தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை இழந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடுவது பற்றி விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் கொரோனா வருவதற்கு முன்பு வரை ஒருபக்கம் எதிர்ப்பு கருத்துகள் மேலும் வலுவாகிக்கொண்டும் வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை சமீபக்காலங்களாகக் குறைந்து வருவதையும் WHO சுட்டிக்காட்டியுள்ளது.
முதன்முதலான தடுப்பூசிகளை எதிர்த்து ஒரு பெரும் அணி, பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்டது. அடுத்ததாக அமெரிக்கா. இதற்குமாறாக உலகம் முழுவதும் பணக்கார நாடுகளைவிட மிகவும் ஏழை மற்றும் வளரும் நாடுகளிடம் தடுப்பூசிகள் மீதான நம்பிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. தெற்காசிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் தடுப்பு மருந்துகளின் மீதான நம்பிக்கை 95% விழுக்காடு காணப்படுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மிகவும் வருமானம் குறைந்த நாடாக இருப்பது ருவாண்டா. அந்நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தியிருக்கிறது அந்நாட்டு அரசு. இலங்கை, இந்தியாவிலும் தடுப்பு மருந்துகளின் மீதான நம்பிக்கை அதிகரித்தே காணப்படுகின்றன. மாறாக ஐரோப்பா, பிரிட்டன், இத்தாலி பிரான்ஸ் போன்ற நவீன நாடுகள், தடுப்பு மருந்துகள் மீதான நம்பிக்கை இழந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
தடுப்பு மருந்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது???
தடுப்பூசி என்பது மனிதன் மற்றும் விலங்குகளின் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டிவிடும் ஒரு வழிமுறை மட்டுமே. இயற்கையாக மனித செல்கள் உடலுக்கு நோயை ஏற்படுத்தும் வைரஸ்கிருமிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சுரப்பிகளை சுரக்கும். இதற்கு பெயர் Immune System என அழைக்கப்படுகிறது. அப்படி உடலில் தோன்றும் நோயை நோய் எதிர்ப்பு மண்டலத்தால் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் செயற்கையாக நோய் எதிர்ப்பு மண்டலம் தூண்டிவிடப்படுகிறது. அதற்கு பெயர் Artificial Immunity. தடுப்பூசிகள் இந்த இரண்டாவது வேலையைத்தான் செய்கின்றன. ஏற்கனவே ஒரு நோயை அறிந்திருந்தால் மட்டுமே மனிதனது நோய் எதிர்ப்பு மண்டலம் அதற்கு எதிராக செயல்படும். ஆனால் கொரோனா போன்ற புதிய வகை வைரஸ்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் போது முதலில் அதுஎன்னவென்று தெரியாமல் உடலுக்குள் அனுமதித்துவிட்டு, வைரஸ் கிருமி வளர்ந்தபின்பு அது ஏற்படுத்தும் நோய்த்தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலம் போராடி வருகிறது. இந்த பாதிப்பை தடுப்பதற்காகவே தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது.
நோயை ஏற்படுத்தும் கொரோனா போன்ற பெருந்தொற்றைத் தவிர்ப்பதற்கு அந்த வைரஸ்கிருமியின் ஒரு சிறு பகுதியை தடுப்பு மருந்தாக உடலுக்குள் செலுத்தும்போது உடலில் உள்ள செல்களின் நினைவுத்திறன் அதைப் பதிவு செய்துகொள்ளும். அப்படி செல்லினால் பதிவு செய்யப்பட்ட வைரஸ்களுக்கு எதிராக மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலமானது, நோயை எதிர்க்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்கிறது. இப்படி மனிதச் செல்களினால் வளர்த்துக் கொள்ளப்படும் எதிர்ப்பு மனோபாவம் பல காலம் வரை நீடிப்பதால் மறுபடியும் இந்த வைரஸ் கிருமிகள் பரவினாலும் அதை உடலிலுள்ள நினைவு செல்கள் அனுமதிப்பதில்லை. நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்வது தடை செய்யப்படுகிறது. இந்த முறையைப் பயன்படுத்தித்தான் மருத்துவ உலகம் பல உயிர்களைக் காப்பாற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசிகள் அடிப்படையில் பல வழிமுறைகளினால் தயாரிக்கப்படுகின்றன. உயிருள்ள கிருமிகளை உடலுக்குள் செலுத்துவதும் ஒரு வழி. ஆய்வுக்கூடத்தில் வளர்த்தப்பட்ட நோய் ஏற்டுத்தும் தட்டம்மை போன்ற வைரஸ் கிருமிகளின் வீரியத்தைக் குறைத்து, குறைந்த அளவில் தடுப்பூசி மூலமாக உடலுக்குள் செலுத்தப்படும். காசநோய்க்கு அளிக்கப்படும் பிசிஜி தடுப்பூசி (BGC VBaccine) இப்படித்தான் உருவாக்கப்படுகிறது. சில நோய் ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளின் வீரியத்தை முற்றிலுமாக குறைத்து கொல்லப்பட்ட கிருமிகளை மட்டுமே தடுப்பூசியாக உடலுக்குள் செலுத்துவார்கள். போலியோவுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசி இப்படித்தான் உருவாக்கப்படுகிறது. தடுப்பூசிகளின் மூலமாக உடலுக்குள் செலுத்தப்படும் வைரஸ் கிருமிகளால் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையில் உடலுக்குள் செலுத்தப்படும் வைரஸ் கிருமிகள் ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்பட்ட ஒன்று. அதன் வீரியம் கூடுமான வரை குறைக்கப்பட்டு நோய் ஏற்படுத்தாத அளவில், மனித செல்களின் நினைவுக்காகச் செலுத்தப்படுகின்றன. நோய்க் கிருமிகள் பெருகிவரும் வேளையில் தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையில்லாத தனம் அதிகரித்து வருவது வருத்தத்தைக் கொடுப்பதாக உலகச்சுகாதாரம் சென்ற ஆண்டு தெரிவித்து இருந்தது. கொரோனா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தடுப்பூசிகள் மீதாக கருத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இந்நேரத்தில் எதிர்ப்பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments