இந்த விளம்பரத்தை எல்லாம் இந்திய மக்கள் எப்படி ஏத்துக்கிறாங்க??? கடுப்பான டேரன் சமி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற இளைஞர் நிறவெறி காரணமாக உயிரிழந்தார். அச்சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு உலகம் முழுவதும் பலத் தரப்புகளில் இருந்து நிறவெறிக்கு எதிராகக் குரல் எழுப்பப் பட்டு வருகிறது. பல உலகத் தலைவர்களும் நிறவெறிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் நிறவெறி காட்டப்படுகிறது என வெளிப்படையான குற்றச்சாட்டுகளை விளையாட்டு வீரர்கள் கூறத் தொடங்கினர்.
வெஸ்ட் இண்டிஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி இந்தியாவில் தான் இனவெறுப்பான வார்த்தையுடன் அழைக்கப்பட்டதாக கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து கிறிஸ் கெயில், டிவைன் பிராவோ, ஜிம்பாப்வே அணி வீரர் போமி எம்பாங்க்வா போன்றோர் தங்களுக்கு நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருந்தனர். இந்திய வீரரான இர்ஃபான் பதான், “தோல் நிறத்தை வைத்து சீண்டுவது மட்டுமல்ல இனவாதம்” என்று தனது கருத்தை பதிவு செய்து இருந்தார். பதானின் கருத்து இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர் மீது காட்டப்படும் வெறுப்பை குறிப்பதாகப் பலரும் விளக்கம் அளித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்தியாவில் விற்கப்படும் அழகுச் சாதனப் பொருட்களிலும் நிறவெறி காட்டப்படுவதாக டேரன் சமி கருத்துத் தெரிவித்து இருக்கிறார். பல இனக் கலாச்சாரங்களும், பல நிறத்தவர்களும் கூடி வாழும் ஒரு நாட்டில் நிறவெறிக்கு ஆதரவான கருத்துகளுடன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய மக்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் டேரன் சமி, “இந்தியாவில் உள்ள பன்முகக் கலாச்சாரத்தில் பல்வேறு நிறங்களில் உள்ள மக்கள் திரள் மத்தியில் எப்படி ஃபேர் அண்ட் லவ்லி என்று ஒரு கிரீமுக்கு பெயர் வைத்து அதை ஏற்றுக் கொள்கிறீர்கள். இந்தப் பெயரிலேயே நிறப்பாகுபாடு இருக்கிறதே. உங்கள் விளம்பரம் வெள்ளை நிறமே அழகு என்கிறது. இது நிறபேதத்தை சூசகமாக அறிவிக்கிறது” எனக் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
ஏற்கனவே ஃபேர் அண்ட் லவ்லி என்ற பெயருக்கு வலுவான எதிர்ப்பு கிளம்பி விட்டது. எனவே இந்திய விற்பனை பொருட்களில் ஃபேர் என்பது போன்ற சொற்களில் இடம் பெறாது என்ற அறிவிப்பை யுனிலீவர் நிறுவனம் கடந்த வாரத்தில் வெளியிட்டு இருந்தது. அதைப் போலவே பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் அழகுச் சாதனப் பொருட்களுக்கு நடிப்பது குறித்த சர்ச்சையும் வெடித்தது. ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு பிறகு உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிராக கருத்துகள் வலுவாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் “கறுப்பர்கள் வாழ்க்கை முக்கியம்” என்ற வாசக அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இதன் செயல் வீரராக டேரன் சமி பங்கு வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com