நடிகை கடத்தல் வழக்கில் திலீப் சிக்கியது எப்படி? திக் திக் நிமிடங்கள்

  • IndiaGlitz, [Wednesday,July 12 2017]

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகர் திலீப், தனது சொந்த பகையை மனதில் வைத்து பிரபல நடிகை ஒருவரை கூலிப்படைகள் வைத்து பழிவாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாள் காவலில் வைத்து விசாரணை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் என்னென்ன நடந்தது என்பதை பார்ப்போம்
நட்சத்திர தம்பதிகளான திலீப் மற்றும் மஞ்சுவாரியர் வாழ்க்கை இனிதே சென்று கொண்டிருந்த நிலையில் இவர்களுடைய வாழ்க்கையில் புயலாக நுழைந்தவர் நடிகை காவ்யா மாதவன். திலீப்புக்கும் காவியா மாதவனுக்கும் காதல் இருப்பதாக கிசுகிசு இருந்தாலும் திரையுலகில் கிசுகிசு சாதாரணமானது என்பதால் ஆரம்பத்தில் மஞ்சிவாரியர் இந்த கிசுகிசுவை கண்டுகொள்ளவில்லை. ஆனால் மஞ்சுவாரியரின் நெருங்கிய தோழியும், பிரபல நடிகையுமான ஒருவர் திலீப் மற்றும் காவ்யா மாதவனின் உறவை தான் நேரில் பார்த்ததாக மஞ்சுவாரியரிடம் கூற, அதுவே அவர்களுடைய திருமண முறிவுக்கு காரணமாகியது.
இதனால் அந்த நடிகையின் மீது கடும் கோபத்தில் இருந்த திலீப், நடிகையை பழிவாங்குவது மட்டுமின்றி அவரது திருமணத்தையும் தடுக்கும் வகையில் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனா படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது திடீரென அவரை சுனி என்ற கூலிப்படை தலைவன் உதவியுடன் கடத்த திலீப் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் முதல் முயற்சி தோல்வி அடைந்தாலும் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அந்த நடிகை கடத்தப்பட்டு நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டது. இந்த வீடியோவை வைத்து அந்த நடிகையை அச்சுறுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம்
ஆனால் எதிர்பாராத திருப்பமாக அந்த நடிகை தைரியமாக நடந்தது அனைத்தையும் காவல்துறையினர்களிடம் புகார் அளித்தார். மேலும் அந்த நடிகைக்கு ஆதரவாக மலையாள திரையுலகமே ஒன்று கூடி ஆதரவளித்தது. எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை சட்டமன்றத்தில் கையில் எடுத்ததால் உடனடியாக கேரள அரசு இந்த வழக்கின் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர்களுக்கு உத்தரவிட்டது.
இதன்காரணமாக இந்த வழக்கு சூடுபிடித்தது. முதலில் ஆழப்புழாவைச் சேர்ந்த வடிவேல் சலீம், கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் கைது செய்யப்பட்டனர். பின்னர் தம்மனத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகையைக் கடத்துவதற்காக கூலிப் படையினர் நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த குற்றச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பல்சார் சுனி, விஜினேஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை காவலில் எடுத்து விசாரித்த போதுதான் இதற்கு மூளையாக செயல்பட்டது நடிகர் திலீப் என்பது தெரியவந்தது.

இந்த குற்றத்திற்காக பல்சர் சுனிக்கு ரூ.1.50 கோடி பேரம் பேசப்பட்டு ஒரு குறிப்பிட்ட தொகை முன்பணமாகவும் திலீப் கொடுத்தது தெரிய வந்தது. ஆனால் குற்றம் நடந்த பின்னர் முழு தொகையையும் பல்சர் சுனிலுக்கு சென்று சேரவில்லை. எனவே சிறையில் இருந்தவாறே திலீப்புக்கு சுனில் லட்டர் ஒன்றை எழுதியுள்ளார். இந்த லட்டர் தான் திலீப்புக்கும் சுனிலுக்கும் இடையே இருந்த உறவை உறுதி செய்தது. இந்த லட்டருக்கு பிறகு பல்சர் சுனிலின் ஆட்கள் தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக திலீப் காவல்துறையில் புகார் மனு கொடுத்து வழக்கை திசை திருப்ப முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் ஜூன் 28ஆம் தேதி திலீப், நதார்ஷா ஆகியோர்களை போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ரூ.1.5 கோடி பேரம் உள்பட பல்வேறு கேள்விகள் கேட்டு அதற்கு திலீப் கூறிய பதிலை வீடியோ எடுத்து வைத்து கொண்டனர் போலீஸ் தரப்பினர். இந்த நிலையில் மலையாள திரைப்பட நடிகர் சங்க கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் திலீப்புக்கு மறைமுக ஆதரவு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் காவ்யா மாதவனுக்கு சொந்தமான கடை ஒன்றில் திடீர் ரெய்டு நடத்தபப்ட்டது. பல்சர் சுனிலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காவ்யா கடையில் தான் நடிகையை வீடியோ எடுத்த மெமரி கார்டு இருப்பதாக தெரிய வந்ததை அடுத்தே இந்த ரெய்டு நடந்ததாக கூறப்பட்டது.
மேலும் பிரபல தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் மூலம தான் தனக்கு நடிகைக்கு நடந்த விஷயம் தெரியவந்தது என்று திலீப் விசாரணையில் கூறியிருந்தார். ஆனால் ஆண்டோ ஜோசப்பிடம் விசாரணை செய்தபோது 'நடிகை தாக்கப்பட்ட தகவல் தெரிந்தவுடன், நடிகர் திலீப்பை போன் மூலம் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்ததாகவும் ஆனால், அவர் போனை எடுக்கவில்லை என்றும் அடுத்த நாள் காலை 9:30 மணிக்குத்தான் திலீப் இடம் நடந்த விஷயத்தை கூறியதாகவும் தெரிவித்தார். இந்த முரண்பட்ட தகவல் திலீப் மீதான சந்தேகத்தை உறுதி செய்தது.
இந்த நிலையில் ஜூலை 10ஆம் தேதி மீண்டும் திலீப்பை விசாரணை செய்த போலீசார் விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்தனர். திலீப்பின் சொந்த ஊரான ஆலுவா நகரில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார். திலீப் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவர் நடிகர் சங்கத்தில் இருந்தும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். திலீப் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது சொந்த ஊரை சேர்ந்த மக்கள் எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று திலீப் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், அவரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த வழக்கில் போலீசார், பாலியல் வல்லுறவு, ஆட்கடத்தல், கிரிமினல் சதி, தவறாக தடுத்துவைப்பது போன்ற இ.பி.கோ சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் திலீப் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வழக்கு நேர்மையாக பாரபட்சமில்லாமல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுமே அனைவரின் எண்ணமாக உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இதுபோன்ற குற்றங்கள் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

More News

ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவால் சரவணா செல்வரத்னம் கடைக்கு சீல் வைப்பு

நெல்லையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் புதியதாக திறக்கப்பட்ட சரவணா செல்வரத்னம் ஸ்டோர் பல்வேறு விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள புகாரை அடுத்து அதன் தரைத்தளத்தை உடனடியாக மூடி சீல் வைக்கும்படி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

போதை பழக்கத்திற்கு அடிமையான இளம் நடிகர்கள். பிரபல தயாரிப்பாளர் வேதனை

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த போதை ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் பிரபல தெலுங்கு நடிகர்கள் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது

இந்து மக்கள் கட்சிக்கு கமலின் சாட்டையடி பதில்

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சாரம் சீரழிகிறது என்ற குற்றச்சாட்டை கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.

நீதியின் முன் அனைவரும் சமம்: திலீப் கைது குறித்து பிரபல தமிழ் நடிகை

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தின் அடிப்படையான வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷங்கரின் அடுத்த படத்தில் 3 வடிவேலு?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் பிசியாக உள்ளார்...