நீ எப்படி கோயிலுக்குள்ளே வரலாம்? வெறுப்பில் பட்டியலினச் சிறுவனுக்கு நடந்த கொடூரம்!!!
- IndiaGlitz, [Wednesday,June 10 2020]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பட்டியலினச் சிறுவன், சிவன் கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ததால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இச்சம்பவத்திற்கு பல தலைவர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கு, இந்தியச் சமூகங்களில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது மிகவும் வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது எனவும் சமூக நல ஆர்வலர்கள் கவலைத் தெரிவித்து உள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள தொம்கேரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயின் மகன் விகாஷ் குமார் யாதவ் (17). இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஜுன் மாதம் 1 ஆம் தேதி அவருடைய கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய முயன்ற போது அங்கிருந்த மற்ற சமூகத்தினர் அவரைத் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் விகாஷ் அவர்களின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் உள்ளே நுழைந்து சாமி தரிசனம் செய்ததாகவும் மீண்டும் வெளியே வந்தபோது மற்ற சமூகத்தினர் அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை அடுத்து விகாஷ் குமாரின் தந்தை ஓம் பிரகாஷ் காவல் துறையில் புகார் அளித்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் நடந்த சம்பவத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மற்ற சமூகத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் விகாஷ் குமார் வீட்டில் உள்ளே நுழைந்து அவரை இழுத்து சென்றதாகவும் அதில் ஒரு இளைஞன் விகாஷ் குமாரை சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஓம் பிரகாஷ் காவல் துறையில் புகார் அளித்து இருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையின் சார்பில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென சண்டையில் ஈடுபட்டதாகவும் அதில் ஒருவன் விகாஷ் குமாரின் மண்டையில் சுட்டுவிட்டதாகவும் தெரிவித்து உள்ளனர். ஆனால் வழக்குப் பதிவு செய்து முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் காவல் துறையினர் தகவல் அளித்து இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா போன்ற பெரும் வியாதி வந்தாலும் வெறுப்பு மட்டும் மறைந்த பாடில்லை என்ற கருத்தை தற்போது பொது மக்களும் வெளிப்படுத்தி வருகின்றனர்.