இரவு நேர ஊரடங்கு எப்படி...? தமிழக அரசு எச்சரிக்கை...!

  • IndiaGlitz, [Friday,April 09 2021]

கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தொற்றின் தாக்கத்தை பொறுத்து இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா 2-ஆம் கட்ட அலையாக உருவெடுத்து, நாட்டு மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் அதன் தாக்கத்தை பொறுத்து வார இறுதி ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை பிறப்பிக்கப்படும். இந்நிலையில் தமிழகத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு அவை நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த சென்னையில் களப்பணிக்காக 15 களப்பணி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.மேலும் பிற சில மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல் குறித்து ஆலோசனைக்காக, பாரத பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டனர். இதில் தமிழகம் சார்பாக தலைமை செயலாளர்,மூத்த அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் பேசியபோது மோடி கூறியிருப்பதாவது,

சென்ற ஆண்டில் ஏற்பட்ட அனுபவத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் இந்த வருடத்தில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள் மற்றும் உயிர்க்காக்கும் கருவிகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு இருக்க வேண்டும், அனைத்து மக்களுக்கும் விரைவில் தடுப்பூசி அளித்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த இரவு நேர ஊரடங்கிற்கு கொரோனா ஊரடங்கு என பெயர் மாற்றம் செய்து, இரவு 9 மணி முதல் அதிகாலை வரை இதன் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்.

தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்காத பட்சத்தில், இந்த இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டிருப்பதாவது,

தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு 10.04.2021 முதல் முற்றிலுமாக தடைவிதித்தும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும் அரசு 8.4.2021 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு (curfew) மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும்” என அதில் கூறப்பட்டுள்ளது.