House Owner Review
ஹவுஸ் ஓனர்: உணர்ச்சியமான ஹவுஸ்
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி போன்ற தரமான படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணனின் அடுத்த இயக்கத்தில் வெளிவந்துள்ள 'ஹவுஸ் ஓனர்' திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
சென்னை வெள்ளத்தின்போது நடந்த ஒரு நிஜ நிகழ்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை. வெள்ளத்தின்போது ஒரு வீட்டில் தனியே மாட்டி கொண்ட வயதான தம்பதியின் நிலை என்ன, அவர்களின் முடிவு என்ன என்ற ஒன்லைன் கதைதான் இந்த படத்தின் கதை
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும், மறதி நோய் பாதிக்கப்பட்டவராகவும் கிஷோர் நடித்துள்ளார். அவருடைய நடிப்பின் ஒவ்வொரு துளியையும் ரசிக்கலாம். ரொம்ப இயல்பான நடிப்பு. நாற்பது வருட நிகழ்வுகளை மறந்துவிட்டு 25 வயதில் இருந்த ஞாபகங்களை மட்டும் வைத்து கொண்டு, இளமை நினைவுடன் முதுமையை காலந்தள்ளும் கேரக்டரில் கச்சிதமாக நடித்துள்ளார் கிஷோர். மனைவியையே யார்? என கேட்பது, மகளிடம் போனில் அன்பாக பேசிக்கொண்டு திடீரென நீ யார்? என கேட்பது, கிளைமாக்ஸில் வெள்ளத்தில் தத்தளித்தபோதிலும் ராணுவ காலத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை காப்பாற்ற முயற்சிப்பது என நடிப்பில் அசத்தியுள்ளார் கிஷோர்.
கிஷோருக்கு அடுத்தபடியாக அவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனியை கூறலாம். கணவர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாலும் ஞாபக மறதி நோயால் அவர் கொடுக்கும் கஷ்டங்களை பொறுத்து கொண்டு வெறுப்பு கலந்த அன்பு செலுத்தும் கேரக்டரில் நடித்துள்ளார். திடீரென கணவனே 'நீ யார்? என்று கேட்கும்போது அதிர்ச்சியுற்றாலும், 'நான் தான் உங்கள் ராதா' என பொறுமையாக புரிய வைக்க முயற்சிப்பது, வெள்ளத்தின்போது கணவரை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சிகளிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கிஷோர், ஸ்ரீரஞ்சனியின் இளமைக்கால ஜோடிகளாக 'பசங்க' கிஷோர் மற்றும் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகரும் நடித்துள்ளனர். இருவருமே மிகைப்படுத்தாத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதால் ரசிக்க முடிகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இந்த நான்கு கேரக்டர்கள் தான் மாறி மாறி வருகிறது என்றாலும் எந்த இடத்திலும் சலிப்பு வரவில்லை என்பதே இயக்குனரின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்கள் அருமை என்றாலும் பின்னணி இசை உறுத்துகிறது. நாமே வெள்ளத்தில் சிக்கியிருப்பது போன்ற காட்சியை அருமையாக இயக்குனர் வைத்திருந்தாலும் அதற்கேற்ப பின்னணி இசை இல்லை என்பது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.
கிருஷ்ண சேகரின் ஒளிப்பதிவு சூப்பர். குறிப்பாக மழை, வெள்ள காட்சிகள், இருட்டில் லைட்டிங் செட் செய்த விதம் என வெகு அருமை. பிரேம்குமாரின் படத்தொகுப்பும் ஓகே ரகம். படம் 109 நிமிடங்களில் முடிந்துவிடுவது ஒரு திருப்திகரமான விஷயம்
இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப கலைஞர்களை மிக அருமையாக வேலை வாங்கியுள்ளார். அதற்கு பாராட்டுக்கள். குறிப்பாக வெள்ள நீர் வீட்டின் உள்ளே வரும் காட்சியில் நாமே வெள்ளத்தில் சிக்கியது போன்ற ஒரு உணர்வை கலை இயக்குனர் செய்துள்ளது சின்ன பட்ஜெட் படத்தில் ஒரு ஆச்சரியம். ஆனால் அதே நேரத்தில் திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்வது, திரும்ப திரும்ப வரும் ரிப்பீட் காட்சிகள் கொஞ்சம் சலிப்படைய செய்கிறது. கிஷோருக்கு ஞாபகமறதி நோய் என்பதை பார்வையாளர்களுக்கு பத்தே நிமிடத்தில் புரிய வைத்துவிட்ட இயக்குனர், அதையே மீண்டும் மீண்டும் குறிப்பிடும் காட்சிகள் வைத்திருப்பது தேவைதானா? என்று எண்ண தோன்றுகிறது. ஒருமணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் குறும்படமாக எடுக்க வேண்டியதை, வேண்டுமென்றே நீளமாக்கியுள்ளது போல் ஒரு உணர்வு படம் பார்த்தவர்களுக்கு ஏற்படுகிறது. அதேபோல் படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு முழுமையான படத்தை பார்த்த திருப்தியும் உணர்வும் மனதில் ஏற்படவில்லை. ஏதோ விடுபட்டுவிட்டது போன்ற ஒரு உனர்வு ஏற்படுகிறது.
மொத்தத்தில் சென்னை வெள்ளத்தை கண்முனே கொண்டு வந்து காட்டும் ஒரு இயல்பான திரைப்படம் என்பதால் ஒருமுறை பார்த்து ரசிக்கும் படமாகவே உள்ளது.
- Read in English