4 மாத வீட்டு வாடகையை கேட்டவர் ஓட ஓட விரட்டி கொலை: சென்னையில் பரபரப்பு
- IndiaGlitz, [Thursday,July 09 2020]
கொரனோ வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் இந்த ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வேலை இன்றி வருமானமின்றி வறுமையில் வாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பெரும்பாலானவர்களால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டு வாடகையை மூன்று மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என அரசு அறிவித்திருந்த போதும் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் வாடகையை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பதும் வாடகை தராதவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் இடையூறுகளை செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் சென்னையில் நான்கு மாத வீட்டு வாடகையை கேட்ட வீட்டு உரிமையாளரை அந்த வீட்டில் குடியிருந்த இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை குன்றத்தூரில் அஜித் என்ற இளைஞர் தான் குடியிருக்கும் வீட்டிற்கு நான்கு மாதங்களாக வாடகை தரவில்லை என்று தெரிகிறது. இதனை அடுத்து வீட்டு உரிமையாளர் குணசேகரன் என்பவர் 4 மாத வாடகை பாக்கியை கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதை அடுத்து வீட்டு உரிமையாளர் குணசேகரன் என்பவரை இளைஞர் அஜித், ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரிந்து வந்து வீட்டு உரிமையாளர் குணசேக்ரை கொலை செய்த அஜித் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்