பீட்டாவுக்கு ஆதரவாக த்ரிஷா தொடர்ந்து செயல்படுவாரா? தாயார் உமா விளக்கம்
- IndiaGlitz, [Tuesday,January 17 2017]
நடிகை த்ரிஷா பீட்டாவின் ஆதரவாளர் என்பதால் சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே த்ரிஷாவின் படப்பிடிப்புக்கு பிரச்சனை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி த்ரிஷாவுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் த்ரிஷா தெரிவித்ததாக ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த த்ரிஷா தற்காலிகமாக டுவிட்டரில் இருந்து விலகினார்.
இந்நிலையில் த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் அவர்களை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் உமா கூறியதாவது:
டுவிட்டரில் கடைசியாக த்ரிஷா தெரிவித்த கருத்து பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அந்த கருத்து பதிவிடப்பட்டுள்ளது. இதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும். த்ரிஷா படப்பிடிப்புக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
6 ஆண்டுகளுக்கு முன்பு தெரு நாய்கள் குறித்து பீட்டா எடுத்த விழிப்புணர்வு பிரசாரத்தில் த்ரிஷா பங்கேற்றார். ஆனால், அதன் பின்னர் அவர் பங்கேற்கவில்லை. இனி பீட்டா நிகழ்ச்சிகளில் த்ரிஷா பங்கேற்க மாட்டார். அதன் விளம்பரத் தூதுவராக திரிஷா செயல்பட்டது கிடையாது. த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பாளர் அல்ல. ஆதரவானவர்தான் என்று அவர் கூறினார்.