முகக்கவசங்களை இப்படி பயன்படுத்துவது ரொம்ப அவசியம்… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!
- IndiaGlitz, [Monday,September 28 2020]
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைக் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் முகக்கவசங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது சயின்டிஃபிக் பத்திரிக்கை கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறது.
அதில், காற்றில் மிதக்கும் கொரோனா வைரஸ் துகள்கள் அளவில் சிறியவை என எச்சரித்துள்ள விஞ்ஞானிகள் இந்த அளவு சிறிய துகள்களில் இருந்து தப்பித்துக் கொள்ள அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக நாம் பயன்படுத்தும் முகக்கவசங்களில் பெரிய அளவிலான துகள்களை ஈர்க்கும் அம்சம் இருக்கிறது. எனவே இதில் இருந்து தப்பித்துக் கொள்ள முறையான முகக்கவசங்களைத் தேர்வு செய்ய வேண்டும் எனவும் எச்சரித்து உள்ளனர்.
இதற்காக அறுவைச் சிகிச்சை முகக்கவசம், N95 முகக்கவசம், வீட்டில் தயாரிக்கப்பட்ட காகித முகக்கவசம் மற்றும் பருத்தி துணியிலான முகக்கவசங்கள் ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் N95 முகக்கவசங்களில் காற்றில் இருந்து வெளியேறும் சிறிய துகள்கள் முதற்கொண்டு அனைத்தையும் வடிகட்டும் திறன் 90% அளவிற்கு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் அறுவைச் சிகிச்சை முகக்கவசங்கள் உரிய பாதுகாப்பை தருவதையும் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் பருத்தித் துணியிலான முகக்கவசங்கள் காற்றில் பறக்கும் சிறிய துகள்களை அப்படியே ஈர்த்து விடுகிறது என்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எனினும் இந்தவகை முகக்கவசம் பெரிய துகள்களை மிகத் திறமையாக வடிகட்டி விடுகிறது என்பதையும் அவர்கள் தெளிவுப்படுத்தி உள்ளனர். எனவே பருத்தித் துணியிலான முகக்கவசங்களை தேர்வு செய்யும்போது கடுமையான எச்சரிக்கையோடு பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பருத்தித் துணியிலான முகக்கவசங்களைப் பயன்படுத்தும்போது முறையாக சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தப்பித்துக் கொள்ள சமூக இடைவெளி, தனிநபர் பாதுகாப்பு மற்றும் முகக்கவசங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலைமையில் இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்பதும் கவனிக்கத்தக்கது.