ஹாலிவுட்டின் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோ!!! மர்ம நிறைந்த இறுதி நாட்கள்!!!
- IndiaGlitz, [Wednesday,August 05 2020]
இருபதாம் நூற்றாண்டின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் மர்லின் மன்றோ. கருப்பு வெள்ளை சினிமாவில் தலைகாட்டி பின்னர் செல்லுலாய்ட்டு வடிவத்துக்கு மாற்றம் பெற்று தற்போது நவீன சினிமாவிலும் “மர்லின் மன்றோ க்ளோனிங்கா?” என உலகம் முழுவதும் சிறப்பிக்கப்படும் ஒரு பேரழகி. பழங்கால கிளியோபட்ராவுக்கு அடுத்தப்படியாக மிகவும் பிரபலமான பெண்மணியாக இருந்தவர் இவர். கவிதை, நாடகங்களின் மீது ஆர்வம் கொண்டிருந்தாலும் இவரின் கட்டழக்கு மட்டுமே ரசிகர்கள் குவிந்தனர். 30 க்கும் மேற்பட்ட பிரபலமான பாடல்களை இவர் பாடியிருந்தாலும் சினிமா உலகம் இவரின் உடல் அழகைத்தான் கொண்டாடி இருக்கிறது. இப்படி உலகின் பிரபலமான பெண்மணியாக அறியப்பட்ட இவருடைய ஆரம்பக்கட்ட வாழ்க்கை மிகவும் போராட்டமானதாக இருந்திருக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரில் 1926 ஜுன் 1 ஆம் தேதி பிறந்த நார்மா ஜின் மோர்டஜன் பின்னாட்களில் மர்லின் மன்றோ வானார். தந்தை யாரென்று தெரியாது. தாய்க்கு சுயநினைவு கிடையாது. பிறந்தபோது பெற்ற தாயே இவரைக் கொலைசெய்ய துணிந்து இருக்கிறார். பிள்ளை பிராயம் முழுவதும் அனாதை இல்லம்… அவ்வபோது தத்தெடுக்கும் பெற்றோர் என இவரின் ஆரம்ப வாழ்க்கை சூனியமாக அமைந்திருக்கிறது. மர்லின் மன்றோவை அவருடய சிறு வயதில் மட்டும் 11 தம்பதியினர் தத்து எடுத்து வளர்த்தார்களாம். அதில் 8 வயதாக இருக்கும்போதே கிம்மல் என்ற வளர்ப்பு தந்தை இவரை வன்புணர்வு செய்திருக்கிறார். இதுமட்டுமல்ல.. கணக்கே இல்லாத அளவிற்கு திரும்பிய இடமெல்லாம் இவருக்குச் சிக்கலாவே இருந்திருக்கிறது.
தாய் மனநலம் சரியில்லாமல் மனநல மருத்துவ மனையில் இருந்ததால் திருமணம் ஒன்றே பாதுகாப்பைக் கொடுக்கும் என நம்பியிருக்கிறார். இதனால் 15 வயதோடு பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு 16 வயதில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். முதல் கணவர் ஜிம்மி டோகர்டி வேலை வாய்ப்புத் தேடி வேறு இடத்திற்கு செல்ல வேண்டி வந்தநிலையில் ஒரு இராணுவத் தளவாடம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்ய ஆரம்பித்து இருக்கிறார் மர்லின். அங்குதான் இவரது வாழ்க்கையில் வசந்தம் ஆரம்பித்து இருக்கிறது. 1944 இல் டேவிட் பொனேவர் என்ற புகைப்படக் கலைஞர் இவரின் அழகைப் பார்த்து மிரண்டு போய் யாங் என்ற பத்திரிக்கைக்காக முதலில் கிளிக் செய்திருக்கிறார். பின்னர் பல பிரபல பத்திரிகைகளின் மாடலானார் மர்லின். ஆனால் இவருக்கு கிடைத்த வருமானம் மிகவும் சொற்பம்தான். அடுத்து சினிமாவில் நடிக்கவும் ஆசை துளிர்க்கிறது. 1945-1962 வரை 23 ஹாலிவுட் படங்களில் இவர் நடித்து இருக்கிறார். இதில் பெரும்பலான படங்கள் பெரிய ஹிட் கொடுத்தப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பக் கட்ட படங்களைப் பொறுத்தவரை இவர் வெறுமனே செக்ஸ் சிம்பிளாகத்தான் பார்க்கப்பட்டார் என்பதும் பெரும் வேதனை.
1953 ஆம் ஆண்டு பிளே பாய் பத்திரிக்கை நிர்வாணமாகக் கொடுத்த போஸ் உலகம் முழுவதும் இன்றைக்கும் மிரட்சியுடன் பார்க்கப்படுகிறது. அதற்காக இவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் வெறும் 50 டாலர். இப்படி பல வேதனையான சூழலிலும் தேர்ந்த ஒரு புத்தக விரும்பியாக இருந்திருக்கிறார் மர்லின் மன்றோ. உண்மையான சூழலிலுள்ள வேதனைகளை மறக்க தஸ்தோவேஸ்கி, சிக்மண்ட் பிராய்ட் போன்றவர்களிடம் விடைத்தேட முயன்றிருக்கிறார். அவருடைய அறையில் 400 புத்தகங்களைக் கொண்ட ஒரு நூலகம் இருந்ததாம். மன்றோ சிறு வயதில் இருந்தே ஒரு விலங்கு பிரியராக இருந்திருக்கிறார். சாலைகளில் தனித்துவிடப்பட்ட விலங்குகளின் மீது அதிக அக்கறை காட்டியிருக்கிறார்.
இரண்டாவது கணவரான பேஸ் பால் விளையாட்டு வீரர் ஜோடி மேக்கியோ மீது அலாதியான அன்பு கொண்டிருந்தார். அவர் உயிழிந்தப்பின் கண்டெடுக்கப் பட்ட கடிதத்திலும் இது உறுதி செய்யப்பட்டது. அப்படியான ஒரு உறவும் பின்னாட்களில் கேள்விக்குறியாகிறது. இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மர்லின் மன்றோவின் ஆடையை மறைக்கும் அந்தப் புகைப்படம்தான் இவர்களின் பிரிவிற்கும் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. 1953 ஆம் ஆண்டு வெளியான River of returns படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி இன்று உலகம் முழுவதும் பிரபலம். பொதுவாக உடலை மறைக்க விரும்பாத மர்லின் மன்றோ இதுகுறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவருடைய கணவர் மேக்கியோ எத்தனை தடவை இந்தக் காட்சி எடுக்கப் பட்டது எனக் கேட்டு துளைத்தெடுத்தாராம். இறுதியில் இருவரும் பிரிந்தனர் என்றும் இவருடைய வாழ்க்கையைக் குறித்து சொல்லும் ஆசிரியர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
அடுத்து அறிவு மீது காதல் கொண்டவராக மாறினார் மர்லின். அப்போது கிடைத்ததுதான் 1961 இல் ஆர்த்தர் மில்லருடான திருமணம். ஆனால் அதுவும் பெரிதாக ஒத்து வரவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் ஒருவிதமான மனச் சிதைவுடனே வாழ்ந்து இருக்கிறார் மர்லின். இதனால் தூக்க மாத்திரைகள், போதைப் பொருட்கள், குடி என்பது இவருக்கு கைவந்த கலையாக இருந்திருக்கிறது. எந்தப் புகைப்படத்தால் கணவர் பிரிந்து சென்றாரே அதே புகைப்படத்தை பின்னாளில் 26 அடி சிலையாக மாற்றியிருக்கிறார் ஒரு ரசிகர். அவருடை அழக்கிற்கு சான்றாக கோல்டன் குளோபல் போன்ற உயரிய விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார் மர்லின். ஆரம்பத்தில் செக்ஸ் பாத்திரத்துக்கு மட்டுமே இவரை பயன்படுத்திய ஹாலிவுட் சினிமா பின்னாளில் நகைச்சுவை, சிறந்த நடிப்பு, இயக்குநர் எனப் பல பரிமாணத்திற்குப் பயன்படுத்தி இருக்கிறது. அத்தனைக்கும் தகுதியுடையவர் எனத் தன்னைத் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருந்தார் மர்லின் மன்றோ.
எப்போதும் தன்னுடைய அழகில் அலாதியான கவனத்தை வைத்திருந்தாராம் மர்லின். அவருடைய முகத்தில் லிப்ஸ்டிக் மற்றும் மஸ்காரா இல்லாமல் இருக்கவே மாட்டராம். சிறுவயதில் அனுபவித்த வன்முறை தொல்லைகள், மனச்சிதைவு இதையெல்லாம் சேர்த்து அடிக்கடி கருக்கலைவு எனப் பல பிரச்சனைகளை அவருடைய வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறார். பேதாதற்கு எண்ட்ரோ மேண்ட்ரிஸ் என்ற பிரச்சனையும் இவருக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. கருப்பையில் ரத்தப்போக்கு என்ற விசித்திரமான சிக்கலால் சில நேரங்களில் மலட்டுத் தன்மை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படி ஹாலிவுட் உலகின் முடிசூடா ராணியாக வாழ்ந்த இவர் தன்னுடைய கலிபோர்னியா வீட்டில் 1962 ஆகஸ்ட் 5 ஆம் தேதி உயிரிழக்கிறார். 36 வயதான மர்லின் மன்றோ அதிகபடியான தூக்க மாத்திரைகளை உபயோகித்தால் உயிரிழந்தார் என்று அவருடைய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக இன்றைக்கு வரைக்கும் நம்பப்படுகிறது. காரணம் அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடிக்கும் அவருடைய சகோதரர் ராபர்ட் கென்னடிக்கும் ஒரே நேரத்தில் இவர் தோழியாக இருந்திருக்கிறார். இவர்களின் நெருக்கத்திற்கு போதுமான புகைப்ப ஆதாரங்களை அன்றைக்கு இருந்த ஊடகங்கள் வெளியிட்டன.
ஜான் எஃப் கென்னடியுடன் இருந்த உறவு கசந்த சமயத்தில் ஒருவேளை மர்லின் மன்றோ பத்திரிக்கையாளர்களை அழைத்து விசயத்தை சொல்லிவிடுவாரோ என அஞ்சப்பட்டதாகவும் ஊடகங்கள் கிசுகிசுக்கின்றன. அந்த நேரத்தில் அவருடைய சகோதரான ராபர்ட் கென்னடி மர்லினை எச்சரிக்க அவரது வீட்டிற்கு சென்றதாகவும் அப்போது ராபர்ட் காதலில் விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மேலும் சிக்கல் அதிகரித்தாகவும் கூறப்படுகிறது. மர்லின் மன்றோ ஆகஸ்ட் 5 ஆம் தேதி அவருடைய படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும் அவருடைய வயிற்றில் 60 தூக்க மாத்திரைகள் இருந்ததாகவும் செய்திகள் வெளியானதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இன்னொரு பக்கத்தில் மர்லின் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. மர்லின் சாவில் கென்னடி சகோதரர்களின் பங்கு இருக்கிறது என உறுதியான கிசுகிசுப்புகளும் இன்றைக்கு வரைக்கும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. பாத்தவுடன் ஆளையே கவிழ்த்துவிடும் பேரழகியான மர்லின் மன்றோ தனது சாவிற்கு பின் உடலை பெற்றுக் கொள்ளக்கூட ஆளே இல்லாமல் இருந்திருக்கிறார். 3 நாட்கள் கழித்து இவருடைய உடல் பெற்றுக்கொள்ளப் பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் இன்றைக்கு வரைக்கும் மர்லின் மன்றோ ஆடை, வீடு, புத்தகம் என்று அனைத்திற்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவருடைய பொருட்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அறக்கட்டளையும் சிறப்பாக நடத்தப்படுகிறது. மர்லின் தனது வாழ்நாளில் எவ்வளவு உயரமான புகழை அனுபவித்தரோ அந்தளவிற்கு சிக்கல்களையும் அனுபவித்து இருக்கிறார். பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இவர் இளைஞர்களின் கனவு கன்னியாக உயர்ந்து நிற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.