ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்

  • IndiaGlitz, [Thursday,September 05 2019]

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் ’ஜனகணமன’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ’என்றென்றும் காதல்’ இயக்குனர் அகமது இயக்கி வருகிறார். ஜெயம் ரவியின் 26 வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் டாப்ஸி, ஈரான் நடிகை ல்னாஸ் நோரோஸி, ஆக்சன் கிங் அர்ஜுன், கேஜிஎப் வில்லன் ராம், மற்றும் ’செக்கச் சிவந்த வானம்’ நடிகை டயானா எரப்பா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் கிளன் போஸ்வெல் என்பவர் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான கோஸ்ட் ரைடர், மேட்ரிக்ஸ், எக்ஸ்மேன், வோல்வரின் மற்றும் ஹாபிட் உள்பட பல படங்களில் பணிபுரிந்தவர் என்பதும் ஹர்திக் ரோஷனின் ’மொகஞ்சதாரோ’, அமீர்கான் - அமிதாப் பச்சனின் ’தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’ போன்ற இந்திய படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோலிவுட்டில் முதல்முறையாக கிளன் போஸ்வெல் பணிபுரிய உள்ளார் என்பதும் ராணுவ வீரராக ஜெயம் ரவி நடிக்கும் இந்த படத்தில் இதுவரை கோலிவுட் திரையுலகில் இல்லாத வகையில் ஸ்டண்ட் காட்சிகள் அமைக்கப்பட இருப்பதால் ஹாலிவுட்டிலிருந்து கிளன் போஸ்வெல் அழைத்து வரப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.