கிராபிக்ஸ் காட்சியிலும் காப்பியா? 'கல்கி 2898 ஏடி' படக்குழுவினர் மீது ஹாலிவுட் கலைஞர் குற்றச்சாட்டு..!

  • IndiaGlitz, [Friday,June 14 2024]

பொதுவாக திரைப்படங்களில் கதை திருட்டு, காட்சிகள் திருட்டு என்பதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் ‘கல்கி 2898 ஏடி’திரைப்படத்தில் கிராபிக்ஸ் காட்சியை காப்பியடித்து உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கிட்டத்தட்ட 6 ஆயிரம் ஆண்டுகள் நடக்கும் கதை என்றும் கல்கி அவதாரத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்றும் கூறப்படும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் டிஸ்னி மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்களில் பணிபுரிந்த கிராபிக்ஸ் வடிவமைப்பாளர் சங் சோய் என்பவர்‘கல்கி 2898 ஏடி’ படத்தின் டிரைலரில் உள்ள ஒரு கிராபிக்ஸ் வடிவமைப்பு தன்னுடையது என்றும் தன்னுடைய அனுமதி பெறாமல் அதை ‘கல்கி 2898 ஏடி’ படக்குழுவினர் பயன்படுத்தி உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

ஒரு கலைஞனின் படைப்பை காப்பி அடித்து தான் இன்னொரு கலைப்படைப்பை உருவாக்க வேண்டுமா? என்று நானே சில சமயங்களில் கேள்வி கேட்டுக் கொள்கிறேன் என்றும் ஆதங்கத்துடன் அவர் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் நெட்டிசன்ஸ் பலரும் ‘கல்கி 2898 ஏடி’ படக்குழுவினரை கலாய்த்தும், சங் சோய்க்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.