அதுல நமக்கு ஏதோ ஒரு செய்தி இருக்கு: 'பொன்னியின் செல்வன்' குறித்து பிரபலங்கள்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ என்ற ’அருண் மொழி வர்மன்’ என்ற ’ராஜராஜசோழன்’ குறித்து பிரபலங்கள் கூறிய காட்சிகளை வெளியிட்டு உள்ளது. இதில் சுந்தர சோழன் என்ற இரண்டாம் பராந்தகன் என்று அழைக்கப்படக்கூடிய சோழ மன்னனுடைய இளைய மகன்தான் அருண்மொழிவர்மன் என்றும் அருண்மொழி பெருமன் அல்லது அருள்மொழிவர்மன் என்பதுதான் அவருடைய இயற்பெயர் என்றும் இலங்கையில் உள்ள கல்வெட்டுக்களில் அருண்மொழி பெருமகன் என்றுதான் உள்ளது என்றும் வரலாற்று ஆய்வாளர் கூறியுள்ளார்.

மேலும் அருள்மொழி வர்மனா அல்லது அருண்மொழிவர்மனா என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது என்றும் அருண்மொழிவர்மன் என்பதுதான் சரியானது என்று வரலாற்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

ராஜராஜ சோழனின் சிறப்புப் பட்டயங்களில் கூறிய குறிப்புகளின் படி தனது சிற்றப்பா உத்தம சோழன் ஆட்சி செய்ய விரும்பியதை அறிந்த ராஜராஜசோழன் சுமார் 12 ஆண்டுகள் தனது சிற்றப்பாவுக்காக ஆட்சியை விட்டுக்கொடுத்தார் என்று வரலாற்று ஆசிரியர் இந்த வீடியோவில் கூறினார்.



இதுகுறித்து பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர் கூறியபோது, ‘ நீலகண்ட சாஸ்திரி என்பவரின் சோழ மன்னர்களின் ஆராய்ச்சிக் குறிப்புகளை வைத்து தான் கல்கி பொன்னியின்செல்வன் நாவலை எழுதினார் என்றும், பொன்னியின் செல்வன் என்ற ராஜராஜ சோழன் என்ற அருண்மொழிவர்மன் அரியணைக்கு அருகில் வந்தபோதும், அந்த அரியாசனத்தை அவர் ஏற்காமல், இது எனக்கு வரவேண்டிய சிம்மாசனம் இல்லை இன்னொருவருக்கு வரவேண்டிய சிம்மாசனம் என்றும் அதனால்தான் அதில் தனது சிற்றப்பா தான் உட்கார வேண்டும் என்றும் அவரை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தவர் தான் அருண்மொழி வர்மன் என்று கூறினார். இது எனக்கு பிரமிப்பாக இருக்கிறது என்றும், அதுல நமக்கு ஏதோ ஒரு செய்தி இருப்பதாக நான் நினைக்கிறேன் என்று பாரதி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.