கமல்ஹாசன் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! 3 பேர் கைது

  • IndiaGlitz, [Wednesday,March 15 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் திரையுலகிற்காகவே பிறந்தவர். இரண்டு மூன்று படங்கள் நடித்த நடிகர்கள் கூட ஓட்டல், ரியல் எஸ்டேட் என சம்பாதித்த பணத்தை வேறு துறைகளில் முதலீடு செய்து வரும் நிலையில் 50 ஆண்டுகளாக சினிமாவில் தன்னுடைய உழைப்பில் கிடைத்த பணம் முழுவதையும் சினிமாவுக்காக மட்டுமே செலவு செய்யும் ஒரே நடிகர். மேலும் சினிமாவை தவிர வேறு எந்த துறையிலும் கால் பதிக்காமல் குறிப்பாக அரசியல் பக்கம் தலைகாட்டாமல் இருப்பவர். அவர் மட்டுமின்றி அவருடைய ரசிகர்களும் நற்பணி இயக்கத்தின் மூலம் சமூக சேவைகள் செய்து வருபவர்கள்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெறும் ஒருசில சம்பவங்களால் அரசியல்பக்கமே தலை காட்டாமல் இருக்கும் கமல்ஹாசனை ஒருசில அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் தூண்டி விட்டு அரசியலுக்கு வரவழைத்து விடிவார்களோ என்ற அச்சம் அனைவரின் மனதில் எழுந்துள்ளது.
ஏற்கனவே சுப்பிரமணியன் சுவாமி முதல் தமிழக முதல்வர் வரை கமல்ஹாசனின் டுவீட்டுக்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு அரசியல் கட்சி கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் புகாரும் கொடுத்துள்ளது. இந்த நிலையில் இன்று கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரிக்க ஒரு மத அமைப்பை சேர்ந்த மூவர் முயற்சி செய்ததாகவும் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் இந்துக்களின் புனித நூலான மகாபாரத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியதாக குற்றம் சாட்டும் இந்த மத அமைப்பினர் ஈரோட்டில் அவருடைய உருவப்பொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். ஆனால் சரியான நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
கமல்ஹாசன் தமிழ்த்திரையுலகிற்கு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள திரையுலகினர்களுக்கு ஒரு வழிகாட்டியாக, ஒரு பேராசிரியராக திகழ்ந்து வருகிறார். அவரை சீண்டி அரசியல் களத்தில் இறக்கிவிட வேண்டாம் என்பதே அனைவரின் பணிவான கோரிக்கையாக உள்ளது.