"கொரோனா வைரஸைத் தடுக்க கோமியம் பார்ட்டி நடத்தவுள்ளோம்"..! இந்து மகா சபா தலைவர்.
- IndiaGlitz, [Thursday,March 05 2020]
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் 29 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு இதைத் தடுக்க கோமியம் பார்ட்டி நடத்தவுள்ளதாக இந்து மகாசபா தலைவர் சக்ரபாணி மகாராஜ் தெரிவித்துள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாததால் உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதுவரை இந்த வைரஸிற்கு 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,000-க்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 29 ஆக உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் மாட்டுக்கோமியம் சர்வலோக நிவாரணி என இந்து மகாசபை தலைவர்களும் பாஜக ஆதரவாளர்களும் தெரிவித்து வந்தனர். இது அறிவியல் மருத்துவ முறைப்படி நிரூபிக்க முடியாததால் பலரால் கிண்டலடிக்கப்பட்டது.
நேற்று இந்து மகா சபா தலைவர் சக்ரபாணி மகாராஜ் இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க கோமியம் பார்ட்டி நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது டீ பார்ட்டி போல் நடத்தப்படும் எனவும் இங்கு கொரோனா பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான விளக்கமும், கோமியமும், மாட்டுச்சாணம், பால் போன்றவையும் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துளளார். இந்த கோமியம், மாட்டுச்சாணம், பால் மற்றும் அகர் பத்தியால் வைரஸ் முற்றிலும் அழியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.