இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம் - விக்கிபீடியா நடத்திய போட்டி
- IndiaGlitz, [Saturday,February 22 2020]
கூகுளில் எதைத் தேடினாலும் முதலில் வந்து நிற்பது விக்கிபீடியா தரவுகள் தான். அந்த அளவிற்கு தற்போது விக்கிபீடியா தரவுகளின் ராஜாவாக உலகம் முழுவதும் வளர்ந்து நிற்கிறது. இத்தகைய கட்டற்ற கலைக்களஞ்சியமாக திகழ்ந்து வரும் விக்கிபீடியாவும் கூகுளும் இணைந்து இந்தியாவில் ஒரு போட்டியை கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது.
இணையத்தில் தரவுகளின் அளவுகளை அதிகப் படுத்தும் நோக்கில் அறிவிக்கப் பட்ட இந்தப் போட்டிக்கு ”வேங்கைத் திட்டம் 2.0” (Tiger) எனப் பெயரிடப் பட்டு இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 10 முதல் இந்த ஆண்டு 10, ஜனவரி 2020 வரை இந்தப் போட்டிக்கு காலம் அறிவிக்கப் பட்டு இருந்தது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகளும் அறிவிக்கப் பட்டு இருந்தன.
இதன் படி இந்திய மொழிகளில் யார் வேண்டுமானாலும் கட்டுரைகளை எழுதி அனுப்பலாம். கொடுக்கப் படும் தலைப்புகளில் 300 வார்த்தைகளுக்குள் எழுத வேண்டும். இந்தப் போட்டிக்கு கூகுள் மொழிப்பெயர்ப்பை பயன்படுத்தவோ அல்லது மற்ற மொழிபெயர்ப்புகளை பயன்படுத்தவோ கூடாது என விதிமுறை வகுக்கப் பட்டிருந்தது.
இந்தி, பஞ்சாபி, மராத்தி, உருது உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இருந்து வேங்கைத் திட்டம் போட்டிக்கு கட்டுரைகள் எழுதப் பட்டன. எனவே மொழிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவியது. 2019 இல் நடைபெற்ற போட்டியில் தொடக்கத்தில் அதிகளவு கட்டுரைகளை எழுதி முதலிடம் பிடித்த தமிழ், தொடர்ந்து பின்னுக்கு சறுக்கியது. இதனால் தமிழ் ஆர்வலர்களிடம் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
இந்த ஆண்டு எப்படியாவது போட்டியில் முதலிடத்தை பெற்று விட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டன. இதற்காக பயிற்சி வகுப்புகளும் நடத்தப் பட்டன. சில தனிப்பட்ட நபர்களின் முயற்சிகளும் இந்த ஆண்டு போட்டியில் வெற்றி பெற்றதற்கு காரணமாக அமைந்தன.
இந்தப் போட்டி அறிவிக்கப் பட்ட முதல் மாதத்தில் இந்தி மொழிகளில் அதிகளவு கட்டுரைகள் எழுதப்பட்டன. ஆனால் போட்டியின் முடிவில் அனைத்து மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி விட்டு தமிழ் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதே சிறப்பு வாய்ந்தது ஆகும்.
இந்த ஆண்டு வேங்கை திட்டம் போட்டியில் தமிழ் 2,959 கட்டுரைகளுடன் முதலிடம் பிடித்திருக்கிறது. 1,768 கட்டுரைகளுடன் பஞ்சாபி இரண்டாம் இடத்தையும் பெங்காலி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இந்தியாவில் அதிக அளவு புழங்கப் படும் மொழி என்ற பெருமைப் பெற்ற இந்தி இந்தப் போட்டியில் 6 வது இடத்திற்குத் தள்ளப் பட்டு இருக்கிறது. இந்தியில் 417 கட்டுரைகள் இடம்பெற்றன. சமஸ்கிருதத்தில் வெறும் 4 போட்டியாளர்களே கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதன்படி சமஸ்கிருதம் கடைசிக்கு தள்ளப் பட்டு இருக்கிறது.
விக்கிபீடியாவில் தமிழ் எழுத்துக்களின் தரவுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்த தமிழ் ஆர்வலர்கள் இந்தப் போட்டியின் வெற்றிக் குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் தமிழ் தரவுகளை உலகம் முழுவதற்கும் கொண்டு செல்வதற்கான ஒரு உக்தியாக இருக்கும் எனவும் கருதப்பட்டு வருகிறது.