கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும்: கொரோனா பாதித்தவர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை
- IndiaGlitz, [Tuesday,April 07 2020]
கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் குறித்த அறிகுறி தெரிந்தவர்கள் தாங்களாகவே அரசு மருத்துவமனைக்கு முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகம் இருந்தால் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன
இதனையும் மீறி ஒரு சிலர் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தும் மருத்துவமனைக்கு செல்லாமல் உள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்து வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சிகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இவ்வாறு வலுக்கட்டாயமாக அழைத்து சுகாதார அதிகாரிகள் மீது ஒருசிலர் தாக்குவதும் அவர்கள் மீது எச்சில் துப்புவதுமான அசம்பாவித சம்பவங்களும் நடந்து வருகிறது இந்த நிலையில் இமாச்சலப் பிரதேச மாநில டிஜிபி அவர்கள் இது குறித்து கூறிய போது ’கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தவர் மீது எச்சிலை துப்பி, அதனால் அந்த நபருக்கு கொரோனோ உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டால் எச்சில் துப்பியர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்,. இதேபோன்று மற்ற மாநில டிஜிபிக்களும் கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்