கர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு 

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடிகுண்டு வைத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது அரசியல் ஆக்கப்பட்டு மதப்பிரச்சனையாக மாற்றப்பட்டு வருகிறது என்பது கொடுமையான ஒன்றாக கருதப்படுகிறது

இந்த நிலையில் கேரளாவில் யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிகுண்டு வைத்த விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது கர்ப்பிணி பசுவிற்கு கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் என்ற பகுதியில் கடந்த 26ஆம் தேதி கர்ப்பிணி பசு ஒன்று பசிக்காக கோதுமை மாவு உருண்டையை சாப்பிட்டுள்ளது. அப்போது திடீரென அந்த மாவு உருண்டையில் உள்ள வெடிகுண்டு வெடித்து அந்த பசுவின் வாய் சிதைந்ததாக போலீசார்களின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது விளை நிலங்களில் உள்ள பயிர்களை பசுக்கள் நாசம் செய்வதால்தான் யாரோ மர்ம நபர்கள் இவ்வாறு கோதுமை மாவு உருண்டையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி உள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது