இளையராஜா நிகழ்ச்சியை அவமதித்துவிட்டீர்கள்: நீதிபதி கிருபாகரன்

  • IndiaGlitz, [Friday,February 01 2019]

இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை பாராட்டும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சென்னையில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 'திரைக்கொண்டாட்டம்' என்ற சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் ஓபிஎஸ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தடை செய்யுமாறு தயாரிப்பாளர் சதீஷ்குமார் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து தயாரிப்பாளர் சதீஷ்குமார் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு அவசர வழக்காக இன்று நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன் கூறியபோது, 'இசையமைப்பாளர் இளையராஜா தமிழகத்தின் பெருமை என்றும், இந்தி பாடல் கேட்டுக் கொண்டிருந்தவர்களை தமிழ் பாடல் கேட்க வைத்தவர் இளையராஜா என்றும் இந்தி இசையே தமிழில் இருந்த எடுக்கும் நிலைக்கு காரணம் இளையராஜாதான் என்றும் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் இந்தியாவே உற்று நோக்கும் மிகப்பெரிய கலைஞனுக்கு நடத்தும் பாராட்டு விழாவை தடை கோரி இந்த நிகழ்ச்சியையே அவமத்தித்து விட்டீர்கள் என்று மனுதாரரை நீதிபதி கிருபாகரன் கடிந்து கொண்டார்.