சென்னை வாசிகளுக்கு இப்படியொரு சோதனையா? அச்சுறுத்தும் புது அறிக்கை!!
- IndiaGlitz, [Friday,August 04 2023]
சென்னை நகரத்தில் சுவாசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் பாதிக்கும் வகையிலான நுண்துகள் மாசுபாடு காற்றில் அதிகம் ஏற்பட்டு இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவித்து இருக்கிறது. அதிலும் உலகச் சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிற பாதுகாப்பான அளவைத் தாண்டி மாசுபாடு அதிகரித்து இருப்பது கவலை அளிக்கிறது.
இந்தியாவிலுள்ள 11 முக்கிய நகரங்களில் காற்றின் தரம் குறித்து கிரீன்பீஸ் இந்தியா அறிக்கை வெளியிட்டு இருந்தது. உலகச்சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பான அளவை விட சென்னையின் காற்றில் பல மடங்கு துகள்கள் இருப்பதாக ‘ஸ்பேர் தி ஏர்‘ எனும் பெயரில் கீரின் பீஸ் இந்தியா அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
காற்றில் நுண்துகள்
வடசென்னை உள்ளிட்ட பல முக்கிய தொழில் பகுதிகளில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதிலுள்ள நுண்துகள் கலப்பு மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்றும் கூறப்பட்டு இருக்கின்றன. அந்த நுண்துகள் சிலிக்கா, மாங்கனீசு, நிக்கல் என்று கூறப்பட்டு இருக்கும் நிலையில் இந்தக் காற்றை சுவாசிக்கும் மனிதர்களுக்கு நரம்பியல் கோளாறுகள், புற்றுநோய், சுவாசக் கோளாறு போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக காற்றில் உள்ள துகள்களின் அளவு மைக்ரானில் வரையறுக்கப்படுகின்றன. காற்று மாசுபாடு 10 மைக்ரானுக்கு குறைவாக இருக்கும்போது நுரையீரலில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் அதிலுள்ள நுண்துகளின் அளவு 2.5 மைக்ரானுக்கு குறைவாக இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என்று உலகச் சுகாதார அமைப்பு தனது வழிகாட்டுதலில் குறிப்பிட்டு இருக்கிறது.
ஆனால் சென்னையிலுள்ள காற்றில் நுண்துகளின் அளவு 2.5 க்கும் குறைவாக இருப்பதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது. அதிலும் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ போன்ற நகரங்களில் உள்ள நுண்துகள் மாசுபாட்டு அளவைவிட சென்னையில் அதிகம் என்று கூறியிருப்பது பலருக்கும் மலைப்பை ஏற்படுத்தி வருகிறது. இது பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் எனும் நிலையில் மாசுபாடு பிரச்சனையை நீக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட வேண்டும் எனும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
கண்களில் வறட்டு தன்மை
மோசமான காற்று மாசுபாட்டு சூழலில் கடுமையான வெப்பமான பருவநிலையும் சென்னையில் நிலவுகிறது. இந்த சூழலில் பெரும்பலான இளைஞர்கள் டிஜிட்டல் திரைகளை மட்டுமே நாள் கணக்கில் பார்க்கின்றனர். அதாவது மொபைல், கணினி, டிவி திரைகள் என்று நாள் கணக்கில் தொடர்ந்து பார்க்கும் இளைஞர்கள் தங்களுடைய கண்களை சிமிட்டுவதற்கே மறந்து போகின்றனர்.
இதனால் அவர்களுடைய கண்கள், வறட்டு தன்மையை அடைகிறது என்றும் நாளடைவில் டிஜிட்டல் கண்ணழுத்தத்திற்கு ஆளாகி அவர்களுக்கு உலர் விழி நோய் ஏற்படுகின்றன என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே கண்கள் கண்ணீரை சுரக்கின்ற அளவிற்கு போதுமான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவ்வாறு இல்லாமல் வறட்சி நோய் பாதிப்பு ஏற்பட்டால் கண் தெரியாமலே போகும் அபாயத்திற்கு அது வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.