சூர்யா உள்பட 8 நடிகர்கள் மீதான வழக்கில் புதிய உத்தரவு
- IndiaGlitz, [Tuesday,June 13 2017]
கடந்த 2009ஆம் ஆண்டு முன்னணி தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியான செய்தி காரணமாக நடிகர் சங்கம் சார்பில் கண்டனக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அப்போதைய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன கூட்டத்தில் சூர்யா, சரத்குமார், விவேக், அருண் விஜயகுமார், விஜயகுமார், சேரன், ஸ்ரீப்ரியா, சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக ஊட்டியைச் சேர்ந்த ரோசாரியோ மரியசூசை என்ற பத்திரிக்கையாளர் உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். ஆனால், எந்த நடிகரும் ஆஜராகாததால் சூர்யா உள்பட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இந்த பிடிவாரண்டுக்கு சென்னை ஐகோர்ட் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் இவ்வழக்கை உதகை நீதிமன்றம் விசாரிக்க தடை கோரி 8 நடிகர்கள் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நடிகர் சூர்யா, அருண் விஜய், விவேக், இயக்குனர் சேரன், சத்யராஜ், விஜயகுமார், சரத்குமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கை உதகை நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.