'தல 57' படத்தில் எத்தனை ஹீரோயின்கள்

  • IndiaGlitz, [Saturday,July 30 2016]

அஜித் நடிக்கவுள்ள 57வது படமான 'தல 57' படத்தில் இரண்டு நாயகிகள் என்றும் அதில் ஒரு நாயகி காஜல் அகர்வால் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னொரு நாயகியாக சிறப்பு தோற்றத்தில் அக்சராஹாசன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் காஜல் அகர்வால் நடிப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. காஜல் அகர்வால் இந்த படத்தில் அமைதியான குடும்ப பெண்ணாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் இரண்டாவது நாயகியாக நடிக்க அக்சராஹாசனிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் மூன்றாவது நாயகி ஒருவர் இணையவுள்ளதாகவும், அவர் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என தெரிகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு பல்கேரியாவில் உள்ள ஸ்டுடியோவில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

வீரம், வேதாளம் படங்களை அடுத்து மூன்றாவது முறையாக அஜித்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தை பிரமாண்டமான முறையில் உலக தரத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.