close
Choose your channels

Hero Review

Review by IndiaGlitz [ Friday, December 20, 2019 • తెలుగు ]
Hero Review
Banner:
KJR Studios
Cast:
Sivakarthikeyan, Abhay Deol, Action King Arjun, Kalyani Priyadarshan, Ivana
Direction:
PS Mithran
Production:
Kotapadi J Rajesh
Music:
Yuvanshankar raja

'ஹீரோ’ திரைவிமர்சனம் - உண்மையான ஹீரோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹீரோ படம், ரிலீசுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

சிறுவயதிலிருந்தே சக்திமான் போல் ஹீரோவாக வேண்டும் என்று மனதில் தோன்றும் சக்திக்கு (சிவகார்த்திகேயன்) ஒரு கட்டத்தில் சக்திமான் என்பது ஒரு கற்பனை கேரக்டர்தான், நிஜவடிவம் கிடையாது, சக்திமான் யாரையும் காப்பாற்ற மாட்டார், நம்மை நாமேதான் காப்பாற்றி கொள்ள வேண்டும், உண்மையான வாழ்க்கைக்கும் சக்திமான் கதைக்கும் சம்பந்தம் இல்லை என்று புரிந்து கொள்கிறார். அதன் பின்னர் தன்னுடைய தந்தையை காப்பாற்றுவதற்காக தன்னுடைய மார்க்‌ஷீட்டைஒரு மிகப்பெரிய தொகைக்கு விற்கும் சக்தி, அதையே தனது தொழிலாகவும் மாற்றி கொள்கிறார். மார்க்‌ஷீட், சான்றிதழ் இல்லாதவர்களுக்கு போலியாக அடித்து கொடுக்கும் தொழிலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய பகுதியில் நன்றாக படிக்கும் ஒரு பெண்ணை ஏரோநாட்டிக்கல் இஞ்ஜினியர் ஆக்க முயற்சிக்கும் போது ஒரு விபரீதம் ஏற்படுவதோடு, அந்த பெண் திருடி என்று குற்றம் சாட்டப்பட்டு பின் மரணமடைகிறார். இந்த மரணம் சக்தியை சிந்திக்க வைத்து,  இதற்கு பின்னால் உள்ளவர் யார்? என்ன காரணம்? நம்முடைய கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் தேவை? நம் கல்வி என்ன நமக்கு கற்று கொடுக்கின்றது? எதை கற்று கொடுக்கவில்லை என்பதை விளக்குவது தான் இந்த படத்தின் மீதிக்கதை.

சிவகார்த்திகேயன் தன்னுடைய ஹீரோ கேரக்டரை மிக அருமையாக செய்துள்ளார். ரொமான்ஸ் மற்றும் ஆக்சன், காமெடி படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதல்முறையாக ஒரு முழுநீள மெசேஜ் படத்தில் நடித்துள்ளார். இருப்பினும் அவரது வழக்கமான ஆக்சன், ரொமான்ஸ், காமெடி ஆங்காங்கே தென்படுகிறது. சிவகார்த்திகேயனின் ஹீரோ கேரக்டர் மிகைப்படுத்தாமல், சூப்பர் ஹீரோ என்றால் எதையும் செய்யும் என குழந்தைத்தனமாக இல்லாமல் மிக இயல்பாக உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பு.

ஆக்சன் கிங் அர்ஜூனுக்கு சிவகார்த்தியன் கேரக்டருக்கு கொஞ்சம் கூட குறைவில்லாத வலுவான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஹீரோவுக்கே ஆலோசனை கூறுவது, ஹீரோவையே காப்பாற்றுவது, வழக்கமான அதிரடி காட்சி, என இவரது நடிப்பை பார்க்கும்போது சிலசமயம் அர்ஜூன் தான் ஹீரோவா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வசனமும் நம்முடைய கல்வி சிஸ்டத்திற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி. சமூகத்தால் மட்டுமின்றி பெற்றோர்களாலும் ஒதுக்கப்பட்ட, தோல்வியடைந்த மாணவர்களின் தனித்தன்மையை கண்டுபிடித்தது, அவர்களை சிந்திக்கவைத்து தனித் திறமையை கண்டு பிடித்து அவர்களது திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். அந்த பள்ளிக்கு ஏற்படும் ஆபத்துக்கள், அந்த ஆபத்துக்களை எப்படி சமாளிக்கிறார்? ஆகியவை மிக அபாரமாக உள்ளது.

நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு இந்த படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும் ஆரம்பகாட்சியில் மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று கூறும் காட்சியிலும், சிவகார்த்திகேயனை உசுப்பிவிடும் காட்சியிலும் தனது முத்திரையை பதித்துள்ளார். இவானா ஒருசில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார். ரோபோ சங்கர் உப்புக்கு சப்பாணி.

வில்லன் அபய் தியோல் அமைதியாக வந்து அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இந்த நாட்டிலுள்ள கல்வியாளர்கள் எதை உருவாக்குகிறார்கள்? எதை அழிக்கிறார்கள் என்பதை அவருடைய கேரக்டர் மூலம் இயக்குனர் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். ஹீரோவுக்கு இணையான வில்லனின் ஐடியாக்கள் தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. அதில் ஒரு பாடலை இசைஞானி பாடியுள்ளார்.  பின்னணி இசை அதிரவைக்கும் அளவில் உள்ளது. குறிப்பாக ஹீரோவாக சிவகார்த்திகேயன் உருவாகும் காட்சிகளின் பின்னணி, வில்லனுக்கு வரும் பின்னணி இசையும் மிக அருமை.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் தனது அதிகபட்ச உழைப்பை கொட்டியிருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் இருட்டில் இருந்தாலும் அந்த காட்சிகள் எல்லாமே பார்வையாளர்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் அளவில் உள்ளது. படத்தொகுப்பாளர் ரூபன் பணி மிக சிறப்பானது. முதல் அரைமணி நேரம் ஜாலியாக சென்றாலும் அதில் வரும் ஒருசில காட்சிகள் படத்தின் கதைக்கு ஆணிவேர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பிஎஸ் மித்ரன் முதல் படமான ’இரும்புத்திரை’ திரைப்படத்திலேயே, டெக்னாலஜி நம்முடைய பாதுகாப்பை எந்த அளவுக்கு கேள்விக்குறி ஆக்கியுள்ளது என்பதை அழுத்தமாக கூறியவர் இந்த படத்தில் நம்முடைய கல்வி சிஸ்டம் எந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது, அதை ஏன் மாற்ற வேண்டும்? என்பதை அழுத்தமான காட்சிகளுடன் கதையை நகர்த்தியுள்ளார். நம்முடைய நாட்டின் கல்வி சிஸ்டம் வேலையாட்களை தான் உருவாக்கிறதே தவிர, வெற்றியாளர்களை உருவாக்கவில்லை என்பதை ஒவ்வொரு ஆட்சியிலும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். கூகுள் சி.இ.ஓவாக ஒரு இந்தியன் இருப்பது பெருமை இல்லை என்றும் கூகுளுக்கு ஓனராக இருப்பதே பெருமை என்பதை இக்கால இளைஞர்கள் மனதில் பதியும் வகையில் கூறியுள்ளார்.

கேள்விக்கு பதில் எழுதுபவன் சாதாரண ஸ்டூடண்ட், ஆனால் கேள்வி கேட்கும் ஸ்டுடண்ட் தான் தேவை என்பதை மனதில் பதிய வைக்கின்றார். ’இந்த உலகத்தில் தான் ஒன்று கொடுத்தால் தான் ஒன்று கிடைக்கும்’, இந்த உலகத்திலேயே தன்னுடைய கண்டுபிடிப்பை பெற்றோரிடம் கூட சொல்ல முடியாமல் பயப்படும் குழந்தைகள் இந்தியாவில் மட்டும் தான் உள்ளது’ உள்பட பல வசனங்கள் கைதட்டல் பெறுகிறது. ஒரு சில காட்சிகள் மிகைப்படுத்துவது போல் தோன்றினாலும் இப்படி எல்லாம் உண்மையாகவே நடந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் மனதில் தோன்றுகிறது. இதுவே இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். ஒவ்வொரு பெற்றோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். தன்னுடைய குழந்தை ஒரு டாக்டராக வேண்டும் எஞ்சினியர் ஆக வேண்டும் என்று அவர்களிடம் தங்களது ஆசையை திணிப்பதை விட அந்தக் குழந்தையிடம் என்ன திறமை இருக்கிறது? என்பதை பார்க்க வேண்டும் என்பதை இதைவிட அழுத்தமாக ஒரு இயக்குனரால் கூற முடியுமா என்பது தெரியவில்லை. குறிப்பாக அந்த ரஃப் நோட் விஷயம், இதுவரை யாரும் சொல்லாத விஷயம். இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் உடனே வீட்டுக்கு சென்று அவரவர் குழந்தையின் ரஃப் நோட்டை பார்ப்பார்கள் என்பது நிச்சயம்.

மேலும் படம் பார்க்கும் ஒருசில பெற்றோர்களாவது தன்னுடைய குழந்தையை வேலைக்கு அனுப்ப கூடாது என்று முடிவெடுத்தால் இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும். இந்தியாவில்தான் அதிக இளைஞர்கள் இருக்கிறார்கள், அதிக மாணவர்கள் இருக்கின்றார்கள். இளைஞர்களின் இலக்கு படித்து முடித்துவிட்டு நல்ல வேலைக்கு செல்வதாக இல்லாமல், வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும் என்று கூறும் கருத்தை இதற்கு முன்னர் வேறு யாராவது கூறியுள்ளார்களா? என்பது தெரியவில்லை. மொத்தத்தில் ஒரு ஷங்கர் படத்தை பார்த்தது போன்ற ஒரு பிரமிப்பை படம் ஏற்படுத்துகிறது. மெசேஜ் மற்றும் எமோஷனல் இரண்டும் சம அளவில் கலந்து இரண்டுமே மிகைப்படுத்தாமல் கூறப்பட்டு இருப்பதால் படத்தில் எந்த இடத்திலும் தொய்வு இல்லை. குறிப்பாக கிளைமாக்ஸ் முந்தைய 5 நிமிடங்கள் ஒவ்வொரு பெற்றோரையும் எழுச்சிபெற வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த படத்தின் உண்மையான ஹீரோ சிவகார்த்திகேயனா? அல்லது அர்ஜுனா? என்ற கேள்வி படம் பார்த்து முடித்து வெளியேறும் பலருக்கு எழுந்தாலும் இந்த படத்தின் உண்மையான ஹீரோ, இப்படி ஒரு சிறப்பான திரைக்கதை அமைத்த பிஎஸ் மித்ரன் தான் புரிந்து கொள்வார்கள். மேலும் படம் முடிந்தவுடன் உடனே வெளியே போகாமல் ரோலிங் காட்சிகள் போது உண்மையான கண்டுபிடிப்புகளும் அதனை கண்டுபிடித்தவர் குறித்த காட்சியை தியேட்டரில் அனைவரும் பொறுமையுடன் பார்த்தது தான் இந்த படத்தின் வெற்றியாக கருதப்படுகிறது.

சூப்பர் ஹீரோ படம் என்றாலே குழந்தைகளை சிரிக்கவைக்கும், குழந்தைகளை கவரும் சாகச காட்சிகள் மட்டுமே இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றி சூப்பர் ஹீரோ படத்திலும் ஒரு மெசேஜ் சொல்ல முடியும் என நிரூபித்த பிஎஸ் மித்ரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ஒரு உண்மையான ஹீரோவை பார்த்த திருப்தி ஏற்படுகிறது.
 

Rating: 3 / 5.0

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE