நீதிபதி கர்ணனுக்கு மனநல பாதிப்பா? மருத்துவர்கள் சோதனை
- IndiaGlitz, [Thursday,May 04 2017]
கடந்த சில வாரங்களாக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியில் இடம்பெற்று வருபவர் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணன். நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதால் சுப்ரீம் கோர்ட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகிய நீதிபதி கர்ணன், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 7 நீதிபதிகள் கொல்கத்தா ஐகோர்ட்டில் ஏப்ரல் 28ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால் 7 நீதிபதிகளும் ஆஜர் ஆகாததால், 7 நீதிபதிகளுக்கும் ஜாமினில் வெளிவர முடியாத பிடியாணையை பிறப்பித்தார். நீதிபதி கர்ணனின் இந்த நடவடிக்கையை அடுத்து அவருக்கு மனநல பரிசோதனை செய்ய கடந்த 1ம்தேதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த சோதனையின் முடிவை வரும் 8ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் சற்று முன்னர் மனநல மருத்துவர்கள் நீதிபதி கர்ணனுக்கு கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் மனநல மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
முன்னதாக இந்த மனநல சோதனைக்கு தான் சம்மதிக்க மாட்டேன் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேருக்குத்தான் மன நல பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கர்ணன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.