நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு குவியும் உதவிக்கரம்
- IndiaGlitz, [Friday,May 04 2018]
தமிழக மாணவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காகவே ராஜஸ்தான் உள்பட வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மையங்களை சி.பி.எஸ்.இ. அமைத்து பழிவாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் வெளிமாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திரையுலகினர் உள்பட பலர் உதவிக்கரங்களை குவித்து வருகின்றனர்.
நடிகர் பிரசன்னா நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும், அரசுப்பள்ளியில் படித்த ஏழை மாணவர்களின் போக்குவரத்து செலவை ஏற்க தயார் என்று தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். அதேபோல் வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் 20 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக நடிகர் அருள்நிதி அறிவித்துள்ளார்.
மேலும் நீட் தேர்வுக்காக கேரளா செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய தயார் என்றும், கேரளாவில் உள்ள 10 மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் தங்கும் வசதி, தேர்வு மையத்தை சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர் மற்றும் உடன் செல்லும் ஒருவருக்கு இலவச ரயில் அல்லது பேருந்து டிக்கெட் கொடுப்பதோடு, ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும், இந்த பணத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.