போரூர் பாலத்திற்கு திறப்புவிழா நடத்திய பொதுமக்கள்! மீண்டும் மூடிய போலீசார்

  • IndiaGlitz, [Wednesday,June 21 2017]

சென்னையின் மிக நெருக்கடியான போக்குவரத்து பகுதிகளில் ஒன்று போரூர் சிக்னல். சென்னை வடபழனி, குன்றத்தூர், பூந்தமல்லி, கிண்டி ஆகிய முக்கியப் பகுதிகளை இணைக்கும் போரூர் ரவுண்டானா வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்வதால் இந்த பகுதியில் எந்த நேரமும் நெருக்கடி ஏற்பட்டே இருக்கும்
இந்த நிலையில் இங்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், இருபுறமும் தலா 7.5 மீட்டரில் சர்வீஸ் சாலையுடன், 480 மீட்டர் நீளம், 37.2 மீட்டர் அகலத்துக்கு ரூ.34.72 கோடியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. சென்னைப் பெருநகர நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 2010 பிப்ரவரியில் பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் இந்த பணி நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் 2015ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த பாலங்களின் பணி முழுமையாக முடிவடைந்தும் அரசு இன்னும் முறைப்படி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை பெய்த மழை காரணமாக போரூர் ரவுண்டானா பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் பாலத்தில் வைத்திருந்த தடுப்பினை அகற்றி தாங்களாகவே திறப்பு விழா நடத்தினர். இதனால் ஒருசில நிமிடங்களில் போக்குவரத்து நெருக்கடி சீரானது. ஆனால் பொதுமக்களே பாலத்தை திறந்தது குறித்த தகவல் அறிந்தவுடன் அங்கு வந்த போலீசார் மீண்டும் தடுப்புகளை அமைத்து பாலத்தை மீண்டும் மூடினர். அதன்பிறகு பாலத்தில் வாகனங்கள் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முறைப்படி காலதாமதம் இன்றி திறந்து வைக்க வேண்டும் என்றும் அரசு மேலும் காலம் தாழ்த்தினால் மீண்டும் பொதுமக்களே திறந்து வைத்து பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக அந்த பகுதி மக்கள் கருத்து கூறினர்.