தமிழகத்தில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை!!! எந்த மாவட்டத்திற்கு அதிக பாதிப்பு தெரியுமா???
- IndiaGlitz, [Thursday,September 10 2020]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக நீலகரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமான மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. மேலும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தகவல் அளிக்கப் பட்டுள்ளது.
வேலூர் திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்படுகிறது.
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது.