ஆரம்பித்தது மழை: தீபாவளிக்கு பின் மேலும் அதிகரிக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
- IndiaGlitz, [Wednesday,November 11 2020]
வடகிழக்கு பருவமழை சமீபத்தில் தொடங்கிய நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பின்படி இன்று முதல் தமிழகத்தில் நல்ல மழை ஆரம்பமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அல்லது இரவு முதல் வரும் 18 அல்லது 19ஆம் தேதி வரை நல்ல மழை பெய்யும் என்றும் இரவு முதல் அதிகாலை வரை மிக கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். எனவே இந்த ஆண்டு கனமழையுடன் தான் தீபாவளி கொண்டாடப்படும் என்பது உறுதியாகியுள்ளது
நவம்பர் 11 முதல் கனமழை ஆரம்பமாக இருப்பதாகவும், நவம்பர் 12 முதல் மிக கனமழை ஆரம்பமாக இருப்பதாகவும், இந்த மழை நவம்பர் 19 வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் ரேடார் கணிப்பில் இருந்து தெரியவந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்
குறிப்பாக வடக்கு தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தென் மாவட்டத்தை பொறுத்தவரை கன்னியாகுமரியில் நல்ல மழை பெய்யும் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தீபாவளிக்குப் பின்னர் மிக கனமழை பெய்யும் என்றும் அந்த மழை நவம்பர் 24 வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நவம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதி சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், புதுச்சேரி, கடலூர் மற்றும் டெல்டா பகுதிகளிலும், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நல்ல மழை இருக்கும் காரணத்தினால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்ப வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் வரும் ஆண்டு கோடையில் தண்ணீர் கஷ்டம் இருக்காது என்றே கணிக்கப்படுகிறது