கொட்டித்தீர்க்கும் கனமழை!!! தாய் தனது 3 குழந்தைகளோடு அடித்துச் செல்லப்பட்ட அவலம்!!!
- IndiaGlitz, [Wednesday,August 05 2020]
மும்பை மாநகரில் நேற்று முன்தினம் இரவு முதல் கனத்த மழைபெய்து வருகிறது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதோடு நேற்று வடக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பல மாநிலங்களில் ரெட் மற்றும் ஆரஞ்சு அலார்ட்டுகள் விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழை இன்று வரைக்கும் நீடித்துக் காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மும்பையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் அதிமாக இருப்பதகாவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
தற்போது மும்பையின் பெரும்பலான பகுதிகள் வெள்ளக்கடாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சாந்தாகுர் பகுதியில் உள்ள தோர்கார்ட்டின் கால்வாய் ஓரமாகக் கட்டப்பட்டு இருந்த மாடி வீடு ஒன்று நேற்று காலை 11.30 மணிக்கு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டில் குடியிருந்த 36 வயது தாய் உட்பட அவரது 1 வயது முதல் 7 வயது வரையுள்ள 3 குழந்தைகள் அடித்துச் செல்லப் பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் 2 வயதுடைய ஒரு பெண் குழந்தையின் உடல் தற்போது மீட்கப் பட்டுள்ளதாகவும் மற்ற இரண்டு குழந்தைகள் மற்றும் தாயின் நிலைமையைக் குறித்து எதுவும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதைத்தவிர தோராய் காட் பகுதியில் வெள்ளப் பாதிப்பில் இருந்து 11 மீனவர்கள் மீட்கப்பட்டதாகவும் அதில் இரு மீனவர்கள் உயிரிழந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மும்பையில் விடிய விடிய கொட்டித் தீர்த்தக் கனமழை காரணமாக அத்யாவசியத் தேவைகளுக்கு இயக்கப்பட்ட மின்சார ரயில்களும் தற்போது நிறுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனை பணிகளுக்கு செல்லும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் கூட தங்களது வீடுகளில் இருந்து பணிக்குச் செல்ல முடியாத நிலைமை உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப் பட்டு ஒட்டுமொத்த மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப் பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
மும்பையின் கடல் ஓரப்பகுதிகளில் கனமழை காரணமாக கடல் அலைகள் 41/2 மீட்டர் உயரத்திற்கு எழுப்பியதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதனால் நகரத்திற்குள் பெய்த மழைநீர் கடலுக்குள் செல்ல முடியாத நிலைமை உருவாகி மும்பை முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மும்பையின் நேற்று முந்தைய இரவு வரை ஒர்லி, மலாடு, மாட்டுங்கா, வாகேஷ்வர் போன்ற இடங்களில் 30 செ.மீ கனமழை பதிவாகி இருக்கிறது. பி.கே. சயான், போரிவிலி, தாதர், அந்தேரி, குர்லா, விக்டோரி, காட்கோட் போன்ற பகுதிகளில் 20 செ.மீ மழை பாதிவாகி இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
மேலும், மும்பையின் நகர்ப்புறங்களில் 23 செ.மீட்டர் மழையாகவும், புறநகர் பகுதிகளில் 20 செ.மீ மழையும் பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தானே, பால்கர் போன்ற மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தானே மாவட்டத்தின் கோட்பந்தர் மாவட்டத்தில் ஒவ்லா பகுதியில் மின்சாரக் கம்பம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.