தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை… சென்னைக்கும் பாதிப்பா?
- IndiaGlitz, [Thursday,November 19 2020]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை மற்றும் லேசான மழைபொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு உள்ளது. அதன்படி மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுதினம் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் 12 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் குன்னூரில் 9 செ.மீ மழையும், தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.