தமிழகத்தை நோக்கி வரும் 'நாடா' புயல். சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு
- IndiaGlitz, [Wednesday,November 30 2016]
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு அது புயலாக உருவாகியுள்ளதால் டிசம்பர் 2 முதல் தமிழகத்தின் பல இடங்களில் பெரும் மழை பெய்யும் என்றும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு நாடா (NADA) என்று பெயரிடப்பட்டுள்ளது. புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை உருவான பின்னர் பெயர் வைக்கப்பட்டுள்ள 35வது புயல் 'நாடா' என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புயல் சின்னம் காரணமாக எந்தெந்த இடங்களில் மழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை தமிழ்நாடு வெதர்மென் (Tamil Nadu Weatherman) என்ற பெயரில் இயங்கும் வானிலை ஆய்வு நிபுணர் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து தற்போது பார்ப்போம்
டிசம்பர் 1: புதுக்கோட்டை முதல் திருவள்ளூர் மாவட்டம் வரையிலான கடலோர பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு. காவிரி டெல்டா பகுதியில் நல்ல மழை பெய்யும். சென்னையில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய இரு நாட்களிலும் கனமழை பெய்யும்
டிசம்பர் 2: நீலகிரி, கோவை பகுதிகளில் குறிப்பாக குன்னூர் பகுதியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த வழியாக புயல் கரையை கடந்து அரபிக்கடலுக்கு செல்வதால் இந்த பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுத்தப்படுகிறது. மேலும் புயல் காரணமாக டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.