சென்னையில் விடிய விடிய கனமழை: பள்ளிகள் இயங்குமா?

  • IndiaGlitz, [Thursday,September 19 2019]

சென்னை மட்டுமின்றி சென்னையின் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என சென்னை கலெக்டர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.

வெப்பசலனம் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, குரோம்பேட்டை, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கே.கே.நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், அண்ணாநகர், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் விடிந்த பின்னரும் மிதமான மற்றும் தூறல் விழுந்து வருகிறது.

இருப்பினும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்களான சீதாலட்சுமி மற்றும் மஹேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதனால் கொட்டும் மழையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாணவ, மாணவியர் தயாராகி வருகின்றனர்.