அடுத்த 12 மணி நேரத்தில்... நிவர் புயலால் சென்னைக்கு ஏற்படும் பாதிப்புகள்!
- IndiaGlitz, [Tuesday,November 24 2020]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக ‘நிவர்’ புயல் உருவானது சற்றுமுன் உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த புயலின் காரணமாக சென்னை உள்பட கடலோர பகுதிகளில் கனமழை கடந்த சில மணி நேரங்களாக பெய்து வருகிறது.
இந்த நிலையில் நிவர் புயல் கரையை கடப்பதற்கு 12 நேரத்திற்கு முன்பும், கரையை கடந்த பின்பும் உருவாகும் சேதம் குறித்து கணிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக அடுத்த 12 மணி நேரங்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என்றும், அதன்பின் புயலின் போதும் நல்ல மழை பெய்யும் என்றும், புயல் கரையை கடந்த பின்னரும் ஒருசில மணி நேரங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் சாலைகள் மழைநீரால் மூழ்க வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும் கூடுமானவரை வரை இருசக்கர வாகனங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
ஏற்கனவே சென்னையில் செம்பரப்பாக்கம் உள்பட ஒருசில நீர்நிலைகள் மொத்த கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் இரண்டு நாட்கள் பெய்யும் கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் திறந்துவிட வாய்ப்பு இருப்பதால் சென்னை வெள்ளத்தில் மிதக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சென்னையில் மழை காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறது என்பதும், போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதுவரை அரசு எடுத்துள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.