மீண்டும் ஒரு மெரீனா போராட்டமா? போலீசார் குவிப்பால் பதட்டம்

  • IndiaGlitz, [Tuesday,March 28 2017]

கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர் சென்னை மெரீனா என்றாலே அது ஒரு சுற்றுலா பகுதி என்பதே மறந்து, மாணவர்களின் ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டத்தின் பயனாக மத்திய மாநில அரசுகள் இறங்கி வந்து ஜல்லிக்கட்டுக்கான தனிச்சட்டத்தை ஒரே நாளில் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை ஏற்படுத்தியது
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நெடுவாசல் மற்றும் தமிழக விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. நெடுவாசலில் அந்த பகுதி மக்களின் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டுவரப்படாது என்று உறுதியளித்த மத்திய அரசு, அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதேபோல் டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை மத்திய அரசு கொண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
எனவே இந்த இரண்டு பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் மீண்டும் ஒரு மெரீனா போராட்டம்தான் சரியான நடவடிக்கை என்று முடிவு செய்த மாணவர்கள் சற்று முன் மெரினாவின் விவேகானந்தர் இல்லம் எதிரில் கூடியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது
மெரினாவில் கூடியுள்ள இளைஞர்கள் தங்களது போராட்டத்திற்கு இளைஞர்கள் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஊடகங்கள் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் கோரிக்கை விடுத்துவருவதால் மிக விரைவில் மிகப்பெரிய கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளதால் அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் போலீசாரின் அறிவுறுத்தலை அடுத்து மெரீனா பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு வருவதாக செய்திகள் கிடைத்துள்ளது.