புதிய போராட்டமா? மெரீனாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு

  • IndiaGlitz, [Saturday,January 28 2017]

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கடந்த வாரம் சென்னை மெரீனாவில் நடத்திய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் உலக தமிழர்களை எழுச்சி அடைய செய்தது. அதுமட்டுமின்றி இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. இருப்பினும் இந்த போராட்டத்தின் முடிவில் வன்முறை ஏற்பட்டதால் இனிமேல் யாரும் மெரீனாவில் போராட்டம் நடத்தக்கூடாது என காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளாகவே மெரீனா உள்பட சென்னையின் முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த தடை இருப்பதால், அந்த தடையை உறுதியாக கடைபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மணி நேரங்களாக மீண்டும் இளைஞர்கள் மெரீனாவில் ஒன்றுகூடி புதிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மெரீனாவில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகப்படும் வகையில் கூட்டம் கூடுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கவே போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.