காசிமேடு மீன்மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்!
- IndiaGlitz, [Saturday,April 24 2021]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு பக்கம் மத்திய மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா வைரஸை கட்டுப்ப்டுத்த பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்னொரு பக்கம் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாளை தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் இன்றே சிக்கன் மட்டன் மற்றும் மீன் கடைகளில் கூட்டம் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர் என்பதும் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிக கூட்டம் இருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்களில் பலர் மாஸ்க் அணிய வில்லை என்பதும் தனிமனித இடைவெளி உள்பட எந்த வித கொரோனா கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்காமல் மீன்களை வாங்க முண்டி அடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது கொரோனாவுக்கு சரியான கொண்டாட்டம்தான் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவு சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தில் சனிக்கிழமையே அதை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் கொரோனாவை வாங்கி கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.