தூங்கக்கூட முடியல… PSBB பள்ளி பாலியல் தொல்லை குறித்து கிரிக்கெட் வீரர் மனவேதனை!

 

சென்னை கே.கே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு திரை பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும் கிரிக்கெட் வீரரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்கள் தனது மனக்குமுறலை தற்போது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். கிரிக்கெட் வீரர் அஸ்வின் சென்னை PSBB பள்ளியில் படித்தவர். அவரது மனைவியும் அதே பள்ளியில் படித்தவர்தான். அந்தப் பள்ளியில் பூத்த நட்புதான் பின்பு திருமண பந்தமாக உருவெடுத்து உள்ளது.

தற்போது PSBB பள்ளியில் ஏற்பட்டு இருக்கும் சர்ர்ச்சை குறித்து பேசியுள்ள அஸ்வின், “PSBB இன் பழைய மாணவராக மட்டுமல்ல, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருக்கிறேன். இதனால் இரண்டு நாட்களாக என்னால் தூங்க கூட முடியவில்லை. அவ்வளவு வேதனையாக இருக்கிறது. ராஜகோபாலன் என்பது இன்று வெளிவந்த ஒரு பெயர். ஆனால் எதிர்காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள இத்தகைய சம்பவங்களைத் தடுக்க நாம் செயல்பட வேண்டும்” எனப் பதிவிட்டு உள்ளார்.

மேலும் பள்ளி என்பது கிரேட், மார்க் என்பதற்காக மட்டும் அல்ல. பள்ளி குழந்தைகளிடம் தைரியத்தை வரவழைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை எதிர்க்கொள்வது குறித்து அவர்களுக்கு தைரியத்தை வரவழைக்க வேண்டும். எதிர்காலச் சந்ததியை வலிமையாக மாற்ற வேண்டும் என்றும் அஸ்வின் கருத்து தெரிவித்து உள்ளார். ஏற்கனவே சோஷியல் மீடியா முழுவதும் PSBB பள்ளி விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது அஸ்வின் தெரிவித்துள்ள இந்தக் கருத்து தனிக்கவனம் பெற்று வருகிறது.