தாயின் மரணத்திற்கு கூட செல்லாமல் துப்புரவு பணியை தொடர்ந்த அதிகாரி
- IndiaGlitz, [Saturday,March 28 2020]
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் போன்றவர்களின் பணி எந்த அளவுக்கு முக்கியமானதோ அதற்கு இணையானது சுகாதாரத்துறை பணியாளர்களின் பணி என்பதை அவ்வப்போது நாம் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் தாயின் மரணத்தை கூட பொருட்படுத்தாமல் சுகாதாரப்பணியில் இருந்த அதிகாரி ஒருவரின் நிகழ்ச்சியான சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்ற துப்புரவு பொறுப்பாளர் நேற்று துப்புரவு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். போபால் பகுதியில் உள்ள வீடுகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் அவர் இருந்தபோது திடீரென அவரது தாயார் மறைந்து விட்டதாக செய்தி வந்தது
இந்த செய்தியால் அவர் துக்கம் அடைந்தாலும் தான் செய்து கொண்டிருக்கும் பணியை பாதியில் விடாமல் பணியை முடித்த பின்னரே தாயாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள சென்றுள்ளார். அதுமட்டுமின்றி தாயின் இறுதி சடங்கை முடித்து விட்டு உடனடியாக மீண்டும் அவர் பணிக்கு திரும்பிவிட்டார்.
இதுகுறித்து அவர் தெரிவித்த போது ’ஒருவருக்கு தாய் என்பவர் மிகவும் முக்கியமானவர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தாயைப் போலவே தாய் நாடும் எனக்கு ரொம்ப முக்கியம். காலை 8 மணிக்கே எனது தாயின் மரணம் குறித்து செய்தியை நான் அறிந்தேன். இருந்தாலும் என் தாய்நாட்டிற்கு நான் செய்ய வேண்டிய கடமையை முடித்துவிட்டு அதன் பிறகுதான் தாயின் இறுதிச் சடங்குக்கு சென்றேன் என்று அவர் கூறியுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இது போன்ற துப்புரவு பணியாளர்கள் இருக்கும் வரை எத்தனை கொரோனா வைரஸ் வந்தாலும் இந்தியாவை அசைக்க முடியாது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்