கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு வேண்டுமா??? சுகாதாரத்துறை விளக்கம்!!!
- IndiaGlitz, [Saturday,September 05 2020]
மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமலே இனி கொரோனா பரிசோதனையை மக்கள் செய்துகொள்ளலாம் என மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனா அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் விருப்பமுள்ளவர்கள் அல்லது பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் என அனைவரும் கொரோனா பரிசோதனையைச் செய்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா அச்சம் மக்களிடையே மேலும் அதிகமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மக்களிடம் உள்ள அச்சத்தை போக்கும் விதமாக மத்திய அமைச்சகம் தேவைப்படுவோர் யார் வேண்டுமானாலும் இனி மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல்கூட கொரோனா பரிசோதனையை, அவர்களாக மருத்துவமனைக்குச் சென்று செய்துகொள்ளலாம் என தெரிவித்து இருக்கிறது. இந்த நடவடிக்கையினால் மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க முடியும் எனவும் மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சம் நம்புவதாகச் செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 86 ஆயிரத்து 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருப்பதாக மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மேலும் இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 1,089 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இதுவரை ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை 40 லட்சத்து 23 ஆயிரத்து 179 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 561 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.