கொரோனா பாதிப்பால் 9 மாத சிகிச்சை… மீண்டுவந்த இளம் பெண்ணின் நெகிழ்ச்சி அனுபவம்!!!
- IndiaGlitz, [Thursday,December 10 2020]
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் பல்வேறு சிக்கலான சிகிச்சைக்குப் பின் உடல் நலம்பெற்று நேற்று வீடு திரும்பியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மையாமி நகரில் உள்ள ஜாக்சன் மெமோரியல் மருத்துவமனையில் உதவியாளராக பணி புரிந்தவர் ரோசா பிலிப் எனும் இளம் பெண். இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பணி நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அதைத் தொடர்ந்து அதே மருத்துவமனையில் ரோசா அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ரோசாவிற்கு நீரிழிவு நோய், ஆஸ்துமா போன்ற கோளாறுகள் இருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் மேலும் அவருடைய உடல் படு மோசமடைந்ததாகவும் அதைத் தொடர்ந்து மருத்துவர்களே கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கொரோனா பாதிப்பினால் அவருக்கு ரத்த அடைப்பு போன்ற கோளாறுகளும் ஏற்பட்டு இருக்கிறது. நுரையீரல் பாதிப்பு போன்ற அடுக்கடுக்கான பிரச்சனைகளைத் சந்தித்த ரோசா, சில மருத்துவர்களின் முயற்சியால் டையாலிசியஸ் செய்யப்பட்டு 2 மாதம் ஐசியூ சிகிச்சையில் இருந்து இருக்கிறார். இந்த சிகிச்சையின்போது ரோசாவின் கைவிரல்கள் அனைத்தும் கறுப்பாக மாறிவிட்டது எனக் கூறப்படுகிறது. மேலும் கால்கள் இரண்டும் சோர்வடைந்து முடங்கிய நிலைக்கே சென்று இருக்கிறது.
ஒரு கட்டத்தில் மருத்துவர்களின் கடும் முயற்சியாலும் ரோசாவின் நம்பிக்கையாலும் அவர் உடல் நலம் பெற்று இருக்கிறார். நேற்று மருத்துவமனையை விட்டு வெளியேறிய அவர் செய்தியாளர்களைச் சந்தித்து, “கொரோனா உண்மையானது, அதன் பாதிப்புகளும் உண்மையானவை. ஆனால் இங்கு பெற்ற அன்பு அதைவிட மிகவும் உண்மையானது. நான் உணர்ச்சிகளை கடக்க முயற்சிக்கிறேன். ஏனென்றால் உயிர்பிழைப்பேன் என்று நினைக்கவில்லை. நான் இனி கைவிட்டுவிட நினைக்க மாட்டேன். நான் இனிமேலும் மேம்படப் போகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.