ஊழியர்களுக்கு ரூ.700 கோடி போனஸா? அசத்தும் இந்திய முன்னணி நிறுவனம்!
- IndiaGlitz, [Tuesday,February 09 2021]
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக இருந்து வரும் ஹெச்.சி.எல் தன்னுடைய ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் போனஸ் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பை கேட்டு அந்த நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஹெச்.சி.எல் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டி இந்திய அளவில் வரலாற்று சாதனை படைத்தது. இந்த வருவாயை கணக்கில் கொண்ட அந்நிறுவனம் தற்போது ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து குஷிப்படுத்தி இருக்கிறது. கடந்த 20 வருடங்களில் ஹெச்.சி.எல் நிறுவனம் தற்போது மைல்கல் சாதனையை அதன் வருவாய் மூலம் அடைந்து இருப்பதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் ஹெச்.சி.எல் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு இந்திய மதிப்பில் 700 கோடி ரூபாய் போனஸை அறிவித்து இருக்கிறது. இந்த போனஸ் திட்டத்தில் கிட்டத்தட்ட 1.59 லட்சம் ஊழியர்களின் குடும்பம் பயன்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட ஹெச்.சி.எல் நிறுவனம், “எங்களுடைய ஊழியர்கள்தான் மதிப்புமிக்க சொத்து. கடுமையான கொரோனா பாதிப்பு காலத்திலும் ஒவ்வொரு ஊழியரும் மிகவும் அர்ப்பணிப்புடனும் ஆர்வமுடமும் பணியாற்றினர். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இது அதிக பங்காற்றி உள்ளது” எனக் குறிப்பிட்டு போனஸ் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த போனஸ் தொகை இந்த மாத இறுதிக்குள் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.