பெண் விவசாயி தொடுத்த வழக்கில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறைதண்டனை!
- IndiaGlitz, [Friday,September 03 2021]
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஏரகுண்டா கிராமத்தைச் சேர்ந்த தலபகா சவித்ரமா என்பவர் தனக்கு முறையாகச் சேரவேண்டிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. மேலும் அதிகாரிகள் பலர் நீதிமன்ற அவதிப்பு செய்திருக்கிறார்கள் எனக்கூறி வழக்கு தொடுத்த நிலையில் பணியில் உள்ள 4 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரி என மொத்தம் 5 பேருக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் சிறைதண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு அளித்திருக்கிறது.
தலபகா சவித்ரமாவின் கணவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் தேசிய மனநல இன்ஸ்டியூட் அமைப்பதற்காகக் கூறி கையக்கப்படுத்தி உள்ளனர். ஆனால் இதற்கான இழப்பீடு தொகை எதுவும் வழங்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் கடந்த 2016 டிசம்பரில் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் விவசாயி தலபகா முறையீடு செய்துள்ளார். இந்த முறையீட்டை அடுத்து இழப்பீடு தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். ஆனால் கொடுத்த வாக்குறுதிப்படி அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை என்று 2017 ஆம் ஆண்டு மீண்டும் ஆந்திர மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம் 2017 பிப்ரவரி 10 ஆம் தேதி தலபகாவிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். அந்த தீர்ப்புக்குப் பிறகும் தலபகாவிற்கு இழப்பீடு பணம் கிடைக்கவில்லை. இதனால் தற்போது அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகக் கூறி தலபகா வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆந்திர மாநிலத்தின் முதன்மை நிதிச் செயலாளர் சம்ஷெர் சிங் ராவத், முதலமைச்சரின் கூடுதல் செயலர் ரெவு முத்யல ராஜு, நெல்லூர் மாவட்ட ஆட்சியர் பாபு, முன்னாள் நெல்லூர் ஆட்சியர் சேஷகிரி பாபு, 2017 இல் முதன்மை நிதிச்செயலராக இருந்து ஓய்வுபெற்ற மன்மோகன் சிங் எனும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இந்த வழக்கில் ஒருமாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
பெண் விவசாயி தலிபகா தொடுத்த இழப்பீட்டு தொகை வழக்கில் நீதிபதிகள் இப்படி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை வழங்கி இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.