டிக் டாக் செயலி மீதான தடை: மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Wednesday,April 24 2019]
டிக் டாக் செயலியில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள் ஆபாசமாகவும் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதாலும் அந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் டிக்டாக் செயலியை தடை செய்யுமாறு நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து மத்திய அரசின் எழுதிய கடிதத்தை தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலி நீக்கப்பட்டது
இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், 'டிக்டாக்' வழக்கை 24ஆம் தேதிக்குள் விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் இல்லையேல் தடை ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்தது
இதனையடுத்து இன்று இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை டிக் டாக் செயலியை டவுன்லோட் செய்ய விதித்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனை விதித்ததோடு, நிபந்தனைகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிபந்தனையை டிக்டாக் தரப்பு ஏற்றுக்கொண்டது. தவறான நோக்கத்திலோ, ஆபாச வீடியோக்களோ டிக்டாக் செயலியில் பதிவு செய்யப்பட்டால் அந்த வீடியோ 15 நிமிடத்தில் நீக்கப்படும் என்றும் டிக்டாக் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது