அலிகாரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு- உபியில் தொடரும் அவலம்!!!

  • IndiaGlitz, [Tuesday,October 06 2020]

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் நாடு முழுவதும் அதிர்ச்சி அலை ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பெண் அப்பொழுதே உயிரிழந்து விட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 7 வயது சிறுமி நேற்று இரவு உயிரிழந்து இருக்கிறார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டம் அடுத்த சாதாபாத்தில் தனது தந்தையுடன் வசித்து வந்தவர் 7 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் அலிகார் மாவட்டத்தில் உள்ள இக்லாஸ் தாலுகா அடுத்த பகத் பதோர் கிராமத்தில் இருக்கும் தனது சித்தி வீட்டிற்கு சென்று தங்கியிருக்கிறார். அப்போது தனது சித்தியின் 14 வயது மகனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார். இச்சம்பவத்தை அடுத்து 14 வயது சிறுவன் உடனடியாக கைது செய்யப்பட்டான்.

மேலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு 7 வயது சிறுமி கடுமையாகத் தாக்கப்பட்டு இருந்ததால் அலிகார் பல்கலைக் கழகத்தின் நேரு ஜவஹர்லால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த அச்சிறுமி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள அவருடைய தந்தை மறுத்து இருக்கிறார். காரணம் இந்தச் சம்பவத்தின்போது தன்னிடம் இகலாஸ் காவல் நிலைய ஆய்வாளர் தரக்குறைவாக நடந்து கொண்டார் எனவும் அவர்மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலைப் பெற்றுக் கொள்வேன் எனக் கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதை விசாரித்த காவல் துறை உயர் அதிகாரிகள் தற்போது இக்லாஸ் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் பிரவீன் குமார் மான் என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.