ஹாசினியை கொடூர கொலை செய்தவருக்கு ஜாமீனா? தந்தை வேதனை
- IndiaGlitz, [Friday,September 15 2017]
டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த மைனர் உள்பட அனைவருக்கும் தண்டனை கிடைத்தது. இதனால் நாட்டில் நீதி இன்னும் செத்துவிடவில்லை என்றே அனைவரும் நம்பியிருந்தனர்.
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
ஆனால் போரூர் அருகே ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இஞ்சினியர் பட்டதாரி தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்த நிலையில் அவர் மீதான குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ததோடு தற்போது அவருக்கு ஜாமீனும் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் ஹாசினியின் பெற்றோருக்கு மட்டுமின்றி அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது
ஹாசினி தந்தை எதிர்ப்பு
ஹாசினியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கு காரணமானவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் மிக எளிதாக ஜாமீனில் வந்தது குறித்து வேதனை தெரிவித்த ஹாசினியின் தந்தை கூறியபோது, 'எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த தஷ்வந்தை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவித்து ஜாமீன் வழங்கியது வேதனை தருகிறது. அவன் வெளியில் இருந்தால் மேலும் பலருக்கு ஆபத்து என்று கூறினார்.
தஷ்வந்த் தந்தை சவால்:
“குற்றவாளியின் தந்தை தன் மகனை வெளியில் கொண்டு வருவேன் என்று என்னிடம் சவால்விட்டார். அவன் வெளியில் வந்து மேலும் பலரை கொல்லவும் தயங்கமாட்டான். பாலியல் வன்கொடுமை செய்தவர்களையும் கொலை செய்தவர்களையும் வெளியில் விடவே கூடாது. என் மகள் மரண சம்பவத்தில் இருந்து என் மனைவி இன்னும் வெளியே வரவில்லை” என்றும் சிறுமியின் தந்தை வேதனையுடன் தெரிவித்தார்
உரிய நடவடிக்கை உறுதி:
இந்த வழக்கு குறித்தும் தஷ்வந்த் ஜாமீன் குறித்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார், 'ஹாசினி வழக்கில் அரசு உரிய மேல் நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற குற்றச்சம்பவங்களுக்கு பாடமாக அமையும் வகையில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்