ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: நனவாகிறது தமிழர்களின் கனவு

  • IndiaGlitz, [Friday,October 27 2017]

உலகில் உள்ள ஏழு செம்மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை பெற கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் முயற்சித்து வருவது குறித்த செய்திகளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். உலகில் உள்ள தமிழுணர்வு கொண்ட தமிழர்கள் இந்த இருக்கையை பெற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். கோலிவுட் திரையுலகிலும் ஜி.வி.பிரகாஷ் உள்பட ஒருசிலர் இதற்காக நிதியுதவி செய்துள்ளனர்.

இந்த நிலையில் உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு செய்தியாக அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை பெற மொத்த செலவு சுமார் ரூ.33 கோடி என்ற நிலையில் தனது பங்காக தமிழக அரசு ரூ.9.75 கோடியை விடுவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தமிழ் இருக்கை பெற தேவைப்படும் மீத பணத்தை பெறுவதற்கு தமிழக அரசு அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளதால் உலக தமிழர்களின் இருக்கை கனவு நனவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.