கொரோனா தடுப்பு நிதியாக ரூ.9 கோடி வழங்கிய பிரபல திரைப்பட கதாசிரியர்!
- IndiaGlitz, [Monday,May 04 2020]
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு துறையினர் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்து வருகின்றனர். குறிப்பாக திரைப்பட துறையில் அக்சயகுமார் ரூ.25 கோடி கொடுத்துள்ளார். அதேபோல் அஜித், விஜய், ராகவா லாரன்ஸ் உள்பட பல நடிகர்கள் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்துள்ளனர். இந்த நிலையில் ஒரு கதாசிரியர் ரூ.9 கோடி கொரோனா தடுப்புநிதி கொடுத்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
உலகளவில் அதிகம் சம்பளம் வாங்கும் எழுத்தாளர்களில் ஒருவர் கே.ஜே.ரவுலிங். இவர் உலகப்புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதையாசிரியர் என்பது பலரும் அறிந்ததே. இந்த நிலையில் கொரோனாவால் தவித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு இவர் 1.25 மில்லியன் டாலர்கள் நிதியுதவி செய்துள்ளார். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
54 வயதாகும் ரவுலிங் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் அதில் இருந்து குணமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது நிதியானது, ஏழை எளிய மக்களுக்கும், உணவின்றி தவிப்பவர்களுக்கும் பயன்படுத்தப்படும் என கூறியுள்ளார். கொரோனா நிதியாக 1.25 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்த ரவுலிங் அவர்களுக்கு நன்றிகள் குவிந்து வருகிறது.