யூடியூப் பாடகரை கண்டுபிடித்த ஹாரிஸ் ஜெயராஜ்.. ஒரே நேரத்தில் 2 இயக்குனர்கள் படங்களில் வாய்ப்பு..!

  • IndiaGlitz, [Saturday,June 24 2023]

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், யூடியூபர் ஒருவரை பாடகர் ஆக தேர்வு செய்த நிலையில் அந்த பாடகர் ஒரே நேரத்தில் இரண்டு பிரபல இயக்குனர்கள் படங்களில் பாடும் வாய்ப்பை பெற்று உள்ளார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயம் ரவி நடித்து வரும் 30வது திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவியின் மாஸ் ஓபனிங் பாடல் ஒன்று இருப்பதாகவும் இந்த பாடலை பாட வித்தியாசமான குரல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் ஒரு புதிய குரலை ஹாரிஸ் ஜெயராஜ் தேடிக் கொண்டிருந்தார்.

அப்போது யூடியூபில் பாடிக்கொண்டிருந்த ஒருவர் இந்த பாடலுக்கு பொருத்தமாக இருப்பார் என்பதை ஹாரிஸ் ஜெயராஜ் கண்டுபிடித்தார். இதையடுத்து அவருடன் தொடர்பு கொண்டு அவருக்கு அந்த பாடலை பாடும் வாய்ப்பு கொடுத்தார்.

இந்த நிலையில் இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டவுடன் இந்த பாடலை கேட்ட இயக்குனர் கௌதம் மேனன் அந்த பாடகரின் திறமை கண்டு ஆச்சரியம் அடைந்தார். உடனே தான் இயக்கி வரும் ’துருவ நட்சத்திரம்’ படத்தில் ஒரு பாடலை அவரையே பாட செய்ததாகவும் அந்த பாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் கண்டுபிடித்த யூடியூப் பாடகர் தற்போது எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயம் ரவி 30’ மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’துருவ நட்சத்திரம்’ ஆகிய இரண்டு படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.