மதுரை ஆதீனத்தின் அடுத்த மாடாதிபதி யார்? நித்யானந்தாவின் கனவு?
- IndiaGlitz, [Saturday,August 14 2021]
மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதி அருணகிரிநாதர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் அடுத்த மடாதிபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பாலியல் வழக்கில் சர்ச்சையை கிளப்பிய சுவாமி நித்யானந்தா நான்தான் மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதி என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
இதைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் சொத்துப் பத்திரங்கள் உள்ள அறைக்கு நேற்று சீல் வைத்து மூடப்பட்டது. தற்போது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் மறைவைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் 293 ஆவது மடாதிபதியாக ஹரிஹர தேசிகர் நியமிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தென்னிந்தியாவில் உள்ள தொன்மையான சைவ மடங்களுள் மதுரை ஆதீனமும் ஒன்று. 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானச்சம்பந்தரால் இந்த ஆதீனம் தோற்றுவிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை 292 பேர் இந்த ஆதீனத்தின் மடாதிபதிகளாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த மடத்தின் இளவரசராக நியமிக்கப்பட்ட ஹரிஹர தேசிகர் தற்போது புதிய மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இதற்கு முன்பு கடந்த 2012 வாக்கில் சுவாமி நித்யானந்தா அவர்களை மறைந்த அருணகிரிநாதர் இளைய மடாதிபதியாக நியமித்தார். ஆனால் பாலியல் வழக்கில் சிக்கி சர்ச்சையை கிளப்பிய நித்யானந்தாவின் பதவியை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் முடிவு நித்யானந்தாவிற்கு சாதகமாகாத நிலையில் தன்னை தானே மடாதிபதியாக அறிவித்துக் கொண்டார். ஆனால் அவருடைய கனவுகள் பொய்த்துப்போய் இருப்பதை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.