குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியா? ஹர்திக் பட்டேல் அதிரடியால் பரபரப்பு
- IndiaGlitz, [Saturday,December 30 2017]
சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி 80 தொகுதிகளிலும் மற்றவர்கள் 3 தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் மீண்டும் குஜராத் முதல்வராக சமீபத்தில் விஜய் ருபானி பதவியேற்றுக் கொண்டார். ஆனால் துணைமுதல்வர் நிதின்பட்டேல் அலுவகம் வந்து இன்னும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த முறை போல நிதி, நகர்ப்புறம், பெட்ரோலியம் ஆகிய துறைகளை அவர் கேட்டதாகவும், ஆனால் நிதின்பட்டேல் கேட்ட துறைகளை பாஜக மேலிடம் ஒதுக்கவில்லை என்பதால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்த ஹர்திக் பட்டேல் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மூத்த தலைவர்களுக்கு பாஜக எப்போதுமே மரியாதை கொடுத்ததில்லை. நிதின் பட்டேல் 10 பாஜக எம்.எல்.ஏ.,க்களுடன் வருவதற்கு தயாராக இருந்தால், நான் காங்கிரசுடன் பேசி அவர்களை வரவேற்று நல்ல பதவி கொடுக்குமாறு கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.
ஹர்திக் கூறியவாறு நிதின்பட்டேல் 10 எம்.எல்.ஏக்களுடன் வந்தால் ஏற்கனவே 80 தொகுதிகள் வைத்துள்ள காங்கிரசுக்கு ஆட்சி அமைக்கும் அளவிற்கு ஆதரவு கிடைத்துவிடும் என்பதால் குஜராத்தில் திடீர் திருப்பம் ஏற்படுமா? என்று அரசியல் விமர்சகர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.